ஹரியானாவில் இருதரப்பினரிடையே மோதல் - வன்முறை.. துப்பாக்கிச் சூட்டில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் பலி.. !!

ஹரியானாவில் 4 இடங்களில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நூஹ் மாவட்டத்தில் குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதி வழியாக மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாகச் செல்ல முயன்றபோது வன்முறை வெடித்தது.
இதையடுத்து, இருதரப்பினரும் மாறி மாறி கல்வீசி தாக்கிக் கொண்டனர். வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மறியல், கடையடைப்பு போன்ற நிகழ்வுகள் அரங்கேறின. தொடர்ந்து ஏராளமான கார்கள் மற்றும் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். கல்வீச்சு சம்பவங்களில் 15க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.
வன்முறையைக் கட்டுப்படுத்தவும், மேலும் பரவலாமல் தடுக்கவும் கூடுதலாக 15 கம்பெனி துணை ராணுவப்படையை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவாமல் தடுக்க நூஹ் மாவட்டத்தில் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. வன்முறை பரவிவருவதைத் தொடர்ந்து நூஹ் மற்றும் குருகிராம் மாவட்டங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபரிதாபாத் மற்றும் பல்வால் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Comments