மனைவியின் அடி.. கணவர் ஓட்டம் போலீஸ் அடி.. கணவரை கொன்றதாக வலியால் ஒப்புக் கொண்ட மனைவி..! கிளைமாக்ஸ்சில் டுவிஸ்ட்டான சம்பவம்
ஒன்றரை வருடத்திற்கு முன்பு மாயமான கணவனை கொலை செய்ததாக போலீசார் மனைவியை கைது செய்த நிலையில் கணவனின் சடலத்தை புதைத்ததாகவும், எரித்ததாகவும், சாம்பலாக்கி ஆற்றில் கரைத்ததாகவும் மனைவி கூறியதாக போலீசார் தெரிவித்த நிலையில் போலீசாரை திகிலடைய செய்த சம்பவம் பத்தனாபுரத்தில் நிகழ்ந்துள்ளது
வாயில் பெப்பர் ஸ்பிரேவை அடித்து போலீசார் கொடுமைப்படுத்தியதால் கணவரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாக கூறிய இளம் பெண் அப்ஷனா இவர் தான்..!
கேரளா மாநிலம் பத்தனாபுரம் அடுத்த பாடம் பகுதியை சேர்ந்த நவ்ஷாத் - அப்சானா தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மீன் விற்பனை செய்து வந்த நவ்ஷாத் பகுதி நேரமாக கார் ஓட்டுநராகவும் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நவ்ஷாத் திடீரென மாயமானார். இது தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு கூடல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு கூடல் காவல் நிலைய போலீசாரை தொலைபேசி மூலம் அழைத்த அப்சானா, அடூர் பகுதியில் காணாமல் போன தனது கணவன் நவ்ஷாதை பார்த்ததாக தெரிவித்தார். அப்படியென்றால் கணவனை ஏன் வீட்டுக்கு அழைத்து வரவில்லை என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்ததால், அப்ஷனா கூறிய இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
எந்த சிசிடிவியிலும், நவ்ஷாத் சிக்கவில்லை என்பதால் அப்ஷனாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தங்களது கிடுக்கிப்பிடி விசாரணையில் கணவனை கொன்று புதைத்ததாக மனைவி அப்சானா வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். உடலை வீட்டுக்குள் புதைத்ததாக அவர் கூறினார் என்று அங்கு தோண்டிப்பார்த்தனர். சடலம் ஏதும் கிடைக்கவில்லை.
பின்னர் கணவன் சடலத்தை எரித்து சாம்பலை ஆற்றில் கலந்து விட்டதாக தெரிவித்த போலீசார் , ஒரு கட்டத்தில் நவ்ஷாத் சடலத்தை அருகிலுள்ள தேவாலயத்தின் கல்லறைத்தோட்டத்தில் புதைத்ததாக அப்ஷனா கூறியதாக தெரிவித்து அங்கும் தோண்டினர். அந்த கல்லறை தோட்டத்தில் ஏற்கனவே பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதால் அதில் எது நவ்ஷாத் சடலத்தின் எலும்பு துண்டுகள் என்று கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டதாக போலீசார் புதுக்கதை சொன்ன நிலையில், கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நவ்ஷாத் உயிருடன் இடுக்கி அருகே தொடுபுழாவில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இது குறித்தது நவ்ஷாத் கூறுகையில், தனது மனைவி அப்சானாவுடன் சண்டை வந்தால் அவர் தன்னை புரட்டி எடுத்து விடுவார் என்றும் அப்படி ஒரு நாள் சாத்து சாத்துவென்று சாத்தியதால் அடிக்கு பயந்து ஊரை விட்டு ஓடியதாக நவ்ஷாத் கூறியுள்ளார்.
மேலும் மனைவியிடம் செல்ல விருப்பமா ? என்று கேட்டதற்கு ஐயோ வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து கொலை பழியோடு போலீஸ் பிடியில் இருந்த அப்ஷனா விடுவிக்கப்பட்டார். அவரிடம் எதற்காக உயிரோடு இருக்கும் கணவனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டீர்கள் என்று கேட்ட போது தன்னை போலீசார் கடுமையாக துன்புறுத்தியதாகவும், வாயில் பெப்பர் ஸ்பிரே வெல்லாம் அடித்து கொடுமை செய்ததால் வலி தாங்காமல் கணவனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாகவும், அவர்களாகவே ஒவ்வொரு இடமாக அழைத்துச்சென்று சடலத்தை தேடுவது போல தோண்டியதாக தெரிவித்தார்.
கொலை செய்யப்படாத கணவரின் சடலத்தை கண்டுபிடிக்க இயலாது என்பதால் சடலத்தை எரித்து, சாம்பலாக்கி தான் ஆற்றில் கலக்கியதாக கதைகட்டிவிட்ட போலீசார் , எல்லாவற்றிக்கும் உச்சமாக ஏதாவது மணடை ஓடு, எலும்பு கூட்டை எடுத்து கணவரின் சடலம் என்று காண்பிக்கும் திட்டத்தில் கல்லறை தோட்டத்திலும் தோண்டியதாக அப்ஷனா தெரிவித்தார்.
அதற்குள்ளாக நவ்ஷாத் உயிரோடு வந்ததால் தான் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார். வலியார் எளியாரை தாக்கினால் அந்த வலியாரை தாக்க வல்லமை மிக்க ஒருவன் வருவான் என்பதற்கு சாட்சியாக நடந்தேறி இருக்கின்றது இந்த சம்பவம்.
Comments