"கார் வெச்சு கடத்தி இருக்கிறோம் ஒரு லட்ச ரூபாயாவது குடும்மா".. போலீசில் சிக்கி கம்பி எண்ணும் பரிதாபம்..!

0 1403

ஆருத்ரா நிறுவனத்தில் பணத்தை பறிகொடுத்த சிலர், தங்களை அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்த கிளை மேலாளரை கடத்தி பணம் பறிக்க முயன்று போலீசில் சிக்கியுள்ளனர்....

அதிக வட்டி தருவதாக கூறி ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் 2 ஆயிரத்து 438கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அதன் இயக்குனர்கள் உட்பட 21 பேரை இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிறுவனத்தின் அமைந்தகரை கிளையின் மேலாளராகப் பணியாற்றிய அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார், கடந்த 2 மாதத்திற்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தினமும் காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த 28ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டுவிட்டு, கோயம்பேடு சேமாத்தம்மன் செக்டர் தெருவிலுள்ள அவரது உறவினர் முருகன் என்பவரை சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று செந்தில்குமாரை தாக்கி காரில் ஏற்றியுள்ளனர்.

செந்தில்குமாரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஆருத்ரா நிறுவனத்தில் மூன்று பேராக சேர்ந்து 15லட்ச ரூபாய் முதலீடு செய்து இழந்திருப்பதாகவும், அந்தப் பணத்தை திருப்பித் தர வேண்டும், இல்லையென்றால் அவரை கொன்றுவிடுவோம் என மனைவியிடம் செல்போனில் மிரட்டி உள்ளனர்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சரண்யா கூறியதும் 3 லட்சம் ரூபாயையாவது தயார் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கும் தன்னிடம் வழியில்லை என்று அவர் கூறவே, ஒரு லட்ச ரூபாயாவது கொடுமா என்று உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் செந்தில் கவுண்டமணியிடம் கேட்பது போல் கேட்டுள்ளனர். இதனையடுத்து நகையை விற்று ஒரு லட்ச ரூபாய் பணத்துடன் அவர்கள் கூறியபடி காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனை அருகே சென்றுள்ளார் சரண்யா. ஆனால் அந்த கும்பல் வரவே இல்லை. இதையடுத்துதான், செந்தில்குமாரின் தாய், 30ஆம் தேதியன்று இரவு 8:30 மணியளவில் கோயம்பேடு போலீசில் புகாரளித்துள்ளார். உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வெள்ளை நிற காரில் செந்தில்குமார் கடத்தப்பட்டது தெரியவந்தது.

காரின் எண்ணை வைத்து அதன் உரிமையாளர் அஜித்குமார் என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளிகள் 6 பேரையும் போலீசார் மடக்கினர். இந்த கைது நடவடிக்கை அனைத்தும் புகாரளிக்கப்பட்ட 7 மணி நேரங்களில் நடந்து முடிந்தது. விசாரணையில் அமைந்தகரை கிளையில் இருந்த செந்தில்குமாரின் ஆசைவார்த்தையை  நம்பி ஆருத்ரா நிறுவனத்தில் செல்வம் , மணிகண்டன், விக்கி ஆகிய மூவரும் 15 லட்சம் முதலீடு செய்து ஏமாந்துள்ளதுள்ளனர். மோசடி செய்த செந்தில்குமார் ஜாமீனில் வெளியே வந்ததை அறிந்து அவரை  கடத்தி பணம் கேட்டால் கிடைக்கும் என்பதற்காக கடந்த ஒருவார காலமாக திட்டமிட்டு கடத்தியுள்ளனர்.

நிதி நிறுவனங்களில் பணத்தை இழந்தவர்கள் விசாரணை முடியும்வரை காத்திருக்காமல் தங்களது பணத்தை திரும்பப் பெற குறுக்கு வழிகளை யோசித்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments