உணவக சிலிண்டர் வெடித்து பட்டாசுக் கிடங்குக்குப் பரவிய தீ... கிடங்கிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி 9 பேர் உயிரிழப்பு....!

கிருஷ்ணகிரி அருகே உணவகத்தில் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ பக்கத்திலிருந்த பட்டாசுக் கிடங்குக்குப் பரவி, பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர்.
பழையபேட்டை ராஜாஜி சாலையில் ராஜேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான உணவகமும் அதனையொட்டி அடுத்தடுத்து ரவி என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கு, வெல்டிங் பட்டறை உள்ளிட்டவை இயங்கி வந்தன.
காலை 10 மணியளவில் உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்ததாகக் கூறப்படும் நிலையில், பக்கத்திலிருந்த பட்டாசுக் கிடங்கில் தீ பரவி பட்டாசுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் உணவகம், பட்டாசுக் கிடங்கு, பட்டறை உட்பட 3 கட்டடங்கள் தரைமட்டமாகின.
இந்த கோர விபத்தில் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, அவரது மகள் ரித்திகா, மகன் ரித்திஷ், ஹோட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாயும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயையும் நிவாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Comments