இன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாட்டம்.. உறுமும் புலிகள்.. உணவுச் சங்கிலிக்கு அவசியம்..!

0 1252

அழிந்து வரும் புலி இனத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினமான புலிகளைப் பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

பேராற்றலும், பேரழகும் கொண்ட உயிரினங்களில் முதலிடத்தில் உள்ளவை புலிகள் இனம். ஒருகாலத்தில் புலி வேட்டையாடுவது என்பது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது.

100 ஆண்டுகளுக்கு முன்பு உலகளவில் புலிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. தற்போது வெறும் 3,167 புலிகள் மட்டுமே இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

வனப்பகுதியில் உள்ள புலிகளின் எண்ணிக்கையே அந்த வனத்தின் வளம் என வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 29ந் தேதி சர்வதேச புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினத்தில் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 9 வகையான புலிகள் இருந்த நிலையில் தற்போது 6 வகையான புலிகள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது.

புலிகளின் அழிவுக்கு வேட்டையாடுதலும், அதன் வாழ்விடம் சுருங்கியதும் முக்கிய காரணமாக அறியப்படுகிறது. அரசின் நடவடிக்கைகளால் 2010-ம் ஆண்டு இந்தியாவில் 1706 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2014ம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,226 ஆக உயர்ந்து தற்போது 3,167ஐ எட்டியுள்ளது. உலகின் 75 சதவீத புலிகள் இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். அதிலும் புலிகளின் புகலிடமாக நீடித்து நிற்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைகள்..

மனிதர்களுக்கான வளர்ச்சி என்ற பெயரில் புலிகளின் வாழ்விடத்தைச் சுருக்கக் கூடாது என்றும், வனத்திற்குள் தேவையான தண்ணீர், இரை போன்றவை இருந்தால் புலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல் நின்றுவிடும் என்றும் கூறுகின்றனர் வனஉயிரின ஆராய்ச்சியாளர்கள்,.

பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குவதற்கு புலிகள் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள்தான் பூஞ்சைக் காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கின்றன.

மனித இனத்தின் அவசியத் தேவையான நீர், தூய்மையான காற்று இவை இரண்டும் கிடைக்க வனம் வேண்டும். வனம் செழிக்க புலிகள் வேண்டும். அதனால், புலிகளைப் பாதுகாக்கும் வகையில் சர்வதேச புலிகள் தினத்தைக் கொண்டாட வேண்டியது அவசியம்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments