ஆபாச சாட்டிங்கில் ஆண்களை மயக்கி ஆட்டையைப் போட்ட கும்பல்! நகைக்கடைக்காரரிடம் நயமாக பேசி ரூ.3.61 கோடி அபேஸ்!

0 8433

ஃபர்ஹானா திரைப்படத்தில் வருவது போல ஆபாச சாட்டிங் மூலமாக சென்னை நகைக்கடை அதிபரிடம் ஆசைவார்த்தை பேசி 3 கோடியே 61 லட்சம் மோசடி செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கும்பலை கொல்கத்தாவுக்கு சென்று தட்டி தூக்கி வந்தனர் சென்னை போலீஸார்.

சென்னையைச் சேர்ந்த 45 வயது நகைக்கடைக்காரர் ஒருவரின் செல்போனிற்கு நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? உங்களை நாங்கள் சந்தோஷப்படுத்துகிறோம் என்ற வாசகத்துடன் வந்துள்ளது ஒரு குறுந்தகவல். அதில், Yoursoulmate.in என்ற இணையத்தளத்தில் ஆயிரம் ரூபாய் செலுத்தி உறுப்பினரானால், இளம்பெண்களிடம் மனம் விட்டு பேசலாம் எனவும் அதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதன் பேரில் பணம் செலுத்தி உறுப்பினரான அந்த நகைக்கடை அதிபர், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதை வாடிக்கையாக மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

ரெகுலர் கஸ்டமராக மாறி விட்ட நகைக் கடைக்காரிடம் தங்களிடம் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் உள்ளதாக செல்ஃபோனில் பேசிய இளம் பெண்கள் கூறியதாக தெரிகிறது. கிரிப்டோ கரன்சி மற்றும் கோல்டு மார்கெட்டிங்கில் முதலீடு செய்தால் 300 சதவீதம் வட்டியும், முதலீட்டிற்கு ஏற்றவாறு தங்கமும் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட தொகைக்கு மேல் முதலீடு செய்தால் வட்டியில்லாமல் 500 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் எனவும் அள்ளி விட்டுள்ளனர்.

கிள்ளை மொழியாலும், அதிக பணம் கிடைக்கும் என்ற கொள்ளை ஆசையாலும் சிறிது சிறிதாக மொத்தம் 3 கோடியே 61 லட்சத்தை செலுத்தி உள்ளார் அந்த நகைக்கடை அதிபர். சில மாதங்கள் கடந்த நிலையில் அவர்கள் கூறிய படி வட்டியோ, கடனோ கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நகைக்கடை அதிபர், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார்.

பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு, மொபைல் எண்களைக் கொண்டு அந்த கும்பல் கொல்கத்தாவில் இருந்து செயல்பட்டு வருவதை கண்டுபிடித்தனர் போலீஸார். கும்பலை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை 10 நாட்களாக கொல்கத்தாவில் முகாமிட்டு உள்ளூர் போலீஸார் உதவியுடன் கும்பலை நெருங்கினர்.

அங்கு அலுவலகம் அமைத்து கால் சென்டராக அவர்கள் இயங்கி வந்தது தெரிய வந்தது. ஆபாசமாக பேசுவதற்காகவே அங்கு நியமிக்கப்பட்டிருந்த சுமார் 50 பெண்களை உள்ளூர் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மோசடி கும்பலுக்கு தலைவியாக செயல்பட்டு வந்த 47 வயது ரூபா ஷா என்ற பெண் மற்றும் ரமேஷ் சோனி, விஜய் சோனி ஆகியோரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர் தனிப்படை போலீஸார்.

அவர்களிடமிருந்து 3 செல்போன், காசோலைகள், 20 டெபிட் கார்டுகளையும் கைப்பற்றிய போலீஸார் இந்த கும்பல் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 5 பேரிடம் சுமார் 8 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்திருப்பதாக தெரிவித்தனர்.

எம்.எஸ்.சி கணிதம் படித்துவிட்டு காப்பீடு, வரிகள் மற்றும் பண பரிவர்த்தனை முதலீடு தொடர்பான கால் சென்டரில் முக்கிய பொறுப்பில் வேலை பார்த்து வந்த ரூபா ஷா, டேட்டிங் ஆப் குறித்தும் தெரிந்து வைத்திருந்ததாக தெரிவித்தனர் போலீஸார். இந்த இரண்டின் மூலமாகவும் ஆண்களிடம் கிளுகிளுப்பூட்டும் வகையில் பேசினால் பணத்தை எளிதில் கறந்து விடலாம் என்று தெரிந்துக் கொண்டு அதனை ரூபாஷா செயல்படுத்தியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

பர்ஹானா என்ற திரைப்படத்தில் வரும் காட்சிகள் போன்றே ஆண்களிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பதற்காக பயிற்சியும் அளித்து வந்துள்ளார் ரூபா ஷா.

தலைமறைவான இக்கும்பலின் தலைவன் லலித் சங்கோனியை தேடி வருவதாக தெரிவித்தனர் போலீஸார். ஆன்லைனில் வரும் முதலீடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள போலீஸார், சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் சைபர் க்ரைம் காவல் நிலையங்களை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments