ஹலோ, கடன் வேணுமா...? ஆப்பில் கடன் வாங்கி மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்...!

0 1839

ஆன்லைன் செயலியில் பெற்ற 5 ஆயிரம் ரூபாய் கடனுக்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டிய பிறகும், புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து குடும்பத்தினருக்கு அனுப்பப்போவதாக மிரட்டப்பட்டதால் திருவாரூரில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் செல்லந்திடலை சேர்ந்தவர் 27 வயதான ராஜேஷ். மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன் வழங்கும் நுண்கடன் நிதி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார் ராஜேஷ்.

ஆன்லைன் செயலி மூலமாக வாங்கிய 5 ஆயிரம் ரூபாய் கடனுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரையில் கட்டிய பின்னரும் அவரிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக தங்களது வங்கி கணக்கிற்கு 3,400 ரூபாய் அனுப்ப வேண்டும் இல்லையென்றால் உனது படத்தை நிர்வாணமாக இருப்பது போன்று மாற்றி குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாக வாட்ஸ்அப்பில் மர்ம நபர்கள் ராஜேஸ்க்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

அவரின் தலையை வேறொரு நிர்வாண புகைப்படத்தோடு மார்பிங் செய்து அவருக்கே அனுப்பியும் வைத்துள்ளனர் மர்மநபர்கள். கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் செல்போன் கான்டாக்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுக்கும் மார்பிங் செய்த புகைப்படத்தை அனுப்பி வைப்போம் எனவும் ராஜேஷிற்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

மிரட்டலுக்கு பயந்து பணத்தை அனுப்பி வைத்த நிலையில், அடுத்த மாதம் குடும்ப உறுப்பினர்கள் குறித்து அவதூறாக கதை எழுதி அதனை ராஜேஸ்க்கு அனுப்பி வைத்துள்ளனர். பணம் அனுப்பாவிட்டால் இந்த கதையை நீயே மற்றவர்களுக்கு அனுப்புவது போன்று அனைவருக்கும் அனுப்பி விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மர்ம நபர்களின் மிரட்டல் அதிகரிக்கவே, தான் கடன் வாங்கிய விபரத்தை தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார் ராஜேஷ்.

இந்நிலையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து ராஜேஷ் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர் வலங்கைமான் போலீஸார்.

ராஜேஷின் செல்போனுக்கு அனுப்பப்பட்ட மெசேஜ், மார்பிங் படங்கள் அனைத்தும் தென்னாப்பிரிக்கா நாட்டிலிருந்து வந்ததை கண்டறிந்தனர் போலீஸார்.

ராஜேஷ் இறந்த பின்னரும் பணம் கேட்டு வந்த மெசேஜிக்கு அவரது உறவினர்கள், ராஜேஷ் இறந்து விட்டதாக பதில் அனுப்பிய போது, அவன் இறந்தால் என்ன? அவனது இன்சூரன்ஸ் பணத்தை பெற்று கடனை நீங்கள் அடையுங்கள் எனவும் மெசேஜ் அனுப்பி உள்ளனர் அந்த மர்ம கும்பல்.

வெறும் 5 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக எனது மகனை கொன்று விட்டார்களே என கண்ணீரோடு வேதனை தெரிவித்தார் ராஜேஷின் தாய் சாவித்திரி.

வேறு யாருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படாமலிருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேஷின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இணையதள செயலிகளில் கடன் வாங்கும் போது அவர்கள் நமது செல்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் கையாளும் அனுமதியை பெற்று விடுகிறார்கள். எனவே, இதுபோன்ற கடன் அழைப்புகளை தவிர்ப்பதே நல்லது என தெரிவித்துள்ளனர் போலீஸார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments