மலை விழுங்கிகள் 18 ஆண்டுகளாக லபக்.... தடுக்க கூட ஆளில்லை.... கவனித்ததால் கவனிக்காத அதிகாரிகள்...!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த குலசேகரன் கோட்டையில் 18 ஆண்டுகளாக கல்குவாரி ஒன்று அனுமதி இன்றி இயங்குவதாகவும், சம்பந்தப்பட்டவர் உள்ளாட்சி பொறுப்பில் இருப்பதால் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லவே அஞ்சுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி பேரூராட்சி அருகே அமைந்துள்ள குலசேகரன் கோட்டையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான கூவரக்காடு மலை குவாரியில் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி தனி நபர் ஒருவர் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கற்களை உடைத்து எடுத்து செல்வதாக வீடியோ ஆதாரத்துடன் புகார் எழுந்துள்ளது
கடந்த 15 ஆண்டுகளாக வாடிப்பட்டி பேரூராட்சி தலைவராக பால்பாண்டியனும், அவரது மனைவி கிருஷ்ணவேணியும் மாறி மாறி இருந்து வரும் நிலையில் பாண்டியன் ப்ளூ மெட்டல் என்ற பெயரில் கல்குவாரி., கிரஷர்., எம் சாண்ட்., பேவர் பிளாக் கல் உள்ளிட்டவற்றை அவர்கள் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
தங்கள் நிறுவனத்திற்கு தேவையான கற்களை குலசேகரன் கோட்டையில் உள்ள கூவக்கரடு மலையில் இருந்து சட்ட விரோதமாக உடைத்து எடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்
அரசுக்கு சொந்தமான கிராம புல எண் 63-ல் கல்குவாரி மலை அமைந்துள்ள நிலையில் மலையின் அருகே புலம் என் 62-ல் பால்பாண்டியனின் நிறுவனமான பாண்டியன் ப்ளூ மெட்டல் நிறுவனமும் செயல்பட்டு வருவதாகவும், அரசுக்கு சொந்தமான இந்த மலையில் இருந்து அனுமதியின்றி கடந்த 2005 ஆண்டு முதல் தற்போது வரை அரசுக்கு தெரியாமல், சில அதிகாரிகளின் உடந்தையுடன் கனிம வளங்களை திருடிவருவதாகவும், அடிக்கடி கல்குவாரியின் மீது கற்களை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்களால் தங்களது வீடுகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் பாண்டியன் முழு மெட்டல் நிறுவனம் சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த மாதம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில்., கடந்த 2005 ஆம் ஆண்டு வரை புவியியல் மற்றும் கனிம வளம் சார்பில் அவ்விடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அதன் பிறகு எவ்வித அனுமதியும் அந்நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை என்றும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த குவாரியில் பொக்லைன் மற்றும் லாரிகள் கற்களை உடைத்து ஏற்றும் கழுகுபார்வை வீடியோ காட்சிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் தெரிவித்த பால்பாண்டியன் , நீதிமன்ற வழக்கு மற்றும் தடையால் ,கடந்த 4 வருடங்களுக்கு மேலாக அந்த கல்குவாரியில் தண்ணீர் தேங்கிக்கிடப்பதாகவும் அங்கு கற்கள் உடைத்து எடுக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்
இயற்கை வளத்தை பாதுகாக்கும் அதி முக்கியப்பொறுப்பில் இருக்கும் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட குவாரியில், உரிய ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments