மனித நேயமற்ற விபத்து.. கொள்ளையர்களை விடுவித்த போலீஸ்..! சட்டத்தில் இடமில்லையாம் ?

சென்னை செம்பியத்தில் இரு சக்கரவாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு செல்போனையும் திருடிச்சென்ற நபர்கள் மீது போலீசார் திருட்டு வழக்கு பதியாமல் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
சென்னை பெரம்பூர் நெல்வயல் பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரதாபன். திருப்பூரை பூர்வீகமாக கொண்ட இவர் இங்குள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 18-ம் தேதி இரவு , வீட்டில் சிலிண்டர் காலியனாதால் , குடும்பத்தினருக்கு உணவு வாங்கி வருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் வெளியேச் சென்ற போது எதிரே வந்த இரு சக்கரவாகனம் மோதி கீழே விழுந்தார்
விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டியும், கூட்டாளியும், உயிருக்கு போராடிய சிவபிரதாபனை காப்பாற்றாமல் அவரது செல்போனை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.
இரு தினங்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் விபத்து தொடர்பாக ஐ.டி. நிறுவனத்தில் வேலைப்பார்த்து வரும் ரமேஷ், கவுதம் என்ற இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீஸார், மோட்டார் வாகன சட்டத்தில் மட்டுமே வழக்கு பதிந்துள்ளதாகவும், செல்போனை எடுத்துக்கொண்டு உள்நோக்கத்துடன் சுவிட்ச் ஆஃப் செய்தது குறித்து ஏன் திருட்டு வழக்கு பதிவு செய்யவில்லையென சட்ட வல்லுனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியவர்கள் மனிதாபிமானத்தோடு ஆம்புலன்ஸ்சுக்கு தெரிவித்திருந்தால் கூட அவர் உயிர் பிழைத்திருப்பாரோ என கண்ணீரோடு வேதனை தெரிவித்தார் அவரது மனைவி ஜெயா.
தந்தையை இழந்து தவிக்கும் இரண்டு குழந்தைகளின் கல்விக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் யாராவது உதவி செய்ய வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார் சிவபிரதாபனின் தாய் தனபாக்கியம்.
விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென சிவபிரதாபனின் சகோதரர் சிவசங்கரன் வலியுறுத்தி உள்ளார்.
Comments