ஓடிச் சென்று உதவியவருக்கு ஓங்கித் தலையில் வெட்டிய ஓவர் போதை கஞ்சா குடுக்கி....!
மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்தவருக்கு உதவியவரை அரிவாளால் வெட்டிய கும்பல், ஏற்கனவே தங்களால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரை மிரட்டுவதற்காக மருத்துவமனைக்குள் நுழைந்த போது போலீஸாரிடம் சிக்கியது.
உதவி செய்யப் போய் தலையில் அரிவாள் வெட்டு வாங்கிக் கொண்ட அப்பாவி மீனவர் மோகன்தாஸ் இவர் தான்.
கன்னியாகுமரி ஹைகிரவுன்ட் பகுதியைச் சேர்ந்தவர் மீனவரான மோகன் தாஸ். திருச்சியில் உள்ள தனது தாய்க்கு பணம் அனுப்புவதற்காக விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு நேற்றிரவு சென்றார் மோகன்தாஸ்.
பணம் செலுத்தி விட்டு வெளியே வரும் போது மோட்டார் சைக்கிளோடு ஒரு இளைஞர் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அவருக்கு உதவி செய்ததாக தெரிகிறது. அப்போது தனது இடுப்பில் வைத்திருந்த அரிவாளை எடுத்த அந்த இளைஞர் மோகன்தாஸை திடீரென வெட்டியதாக கூறப்படுகிறது.
மோகன்தாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அதே அரசு மருத்துவமனைக்கு, சுனாமி காலனியைச் சேர்ந்த ஆக்னல், லூர்து மாதா தெருவைச் சேர்ந்த டைசன் என்ற இளைஞர்களும் தங்களை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி விட்டதாக கூறி சிகிச்சைக்கு சேர்ந்தனர். அடுத்தடுத்த பகுதியில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு என்பதால் தகவலறிந்த டி.எஸ்.பி மகேஷ் குமார், மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று மூவரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
தன்னை வெட்டியவனுக்கும் தனக்கும் அறிமுகமே கிடையாது எனவும், உதவி செய்த தன்னை வெட்டி விட்டதாகவும் கூறினார் மோகன் தாஸ். ஆக்னலும், டைசனும் தங்களை சுனாமி காலனியைச் சேர்ந்த ஜெப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டியதாக கூறினர்.
மூவரை வெட்டியதும் ஒரே நபர் தான் என்பது தெரியவந்ததை அடுத்து ஜெப்ரின் என்ற அந்த நபரை உடனடியாக கண்டுபிடிக்க போலீஸாருக்கு டி.எஸ்.பி உத்தரவிட்டுக் கொண்டிருந்த போதே, ஜெப்ரின் மருத்துவமனைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
தான் வெட்டிய 3 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களை பார்க்க வந்திருப்பதாகவும் கஞ்சா போதையில் இருந்த ஜெப்ரின் போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த போலீஸார் அவனை பிடிக்க முயலுகையில் கீழே விழுந்து ஜெப்ரினுக்கு சிறு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஜெப்ரினை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போலீசாருடன் அவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான்.
விசாரணையில், தன்னை ரௌடியாக காட்டிக் கொண்டு சுற்றி வரும் ஜெப்ரின், அதற்காகவே மூன்று பேரையும் வெட்டியது தெரியவந்ததாக போலீசார் கூறினர். வெட்டுப்பட்டவர்கள் தன்னைப்பற்றி புகார் கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்களை பார்த்து மிரட்டுவதற்காக மருத்துவமனைக்கு ஜெப்ரின் வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் கொட்டாரம் பகுதியிலும் இதேப்போன்று 3 பேரை ஜெப்ரின் அரிவாளால் வெட்டியதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஜெப்ரின் மற்றும் அவனது கூட்டாளி கன்ஸ்டன் ராபினை கைது செய்தனர்.
Comments