காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்க சிசிடிவி பதிவுகளை காட்டச் சொல்லி தலைமைக் காவலரை மிரட்டிய ரவுடி கைது...!

சென்னை வியாசர்பாடியில், காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்க, தமது வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி பதிவுகளைக் காட்டச் சொல்லி, தலைமைக் காவலரை மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டான்.
வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் மாறன் என்பவர், தேசிகானந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 9ம் தேதி மதியம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாறன், வெளியே சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது, மதுபோதையில் இருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவன், தனது செல்போன் தொலைந்துவிட்டதாகவும் அதனை கண்டுபிடிக்க தங்கள் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டுமென கூறியுள்ளான்.
அவன் போதையில் இருந்ததால் சிறிது நேரம் கழித்து வருமாறு தலைமைக் காவலர் கூறியதால் ஆத்திரமடைந்த ரவுடி, தலைமைக் காவலர் மாறனை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளான்.
இது தொடர்பாக தலைமைக் காவலர் மாறன் அளித்த புகாரின் பேரில் ரகளையில் ஈடுபட்ட கபாலி என்ற ரவுடியை கைது செய்த போலீசார், அவன் மீது ஏற்கனவே 22 வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Comments