மதுப்பிரியர்களுக்கு டெட்ரா பாக்கெட் வேணாம்.... ஆளுக்கொரு பெட் கொடுங்க..!

0 1479

மது போதை தலைக்கேறியதால் திருத்தணியில் சாலையில் படுத்துக் கொண்டு போலீஸ்காரர் ஒருவரை முன்னாள் ரவுடி ஓட விட்ட சம்பவம் நடந்தது. இதேப்போன்று, கோவை, நாமக்கல்லிலும் மதுபோதையர்களின் அட்டகாசத்தால் மக்கள் பாதிப்பை சந்தித்தது குறித்து விளக்குகிறது இந்த செய்தி...  

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் விட்டால் போதுமென போலீஸ்காரரை ஓட விட்ட முன்னாள் ரவுடி மூனு சீட்டு குப்பன் இவர் தான்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த அரக்கோணம் சாலையில் வாகனத்தின் முன்பு படுத்து உருண்டுக் கொண்டு இருந்தார் ஒருவர். இதுகுறித்து, அப்பகுதியில் இருந்த போலீஸாரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலீஸார், தண்ணிப்போட்டு சாலையில் படுத்திருப்பது ஒரு காலத்தில் காவல்துறைக்கு தண்ணி காட்டிய ரவுடி குப்பன் என்பதை தெரிந்துக் கொண்டனர்.

குப்பனை அங்கிருந்து போகுமாறு கூற அவரோ, போலீஸாரின் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவர்களை நகர விடவில்லை. வேறுவழியின்றி அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவருடன் சேர்ந்து அவரை சாலையோரமாக படுக்க வைத்தனர் போலீஸார்.

ஆனாலும், அங்கிருந்து எழுந்து வந்த குப்பன் மீண்டும் சாலையில் படுத்ததால், ஆளை விட்டால் போதுமடா சாமியென சட்டம்-ஒழுங்கு போலீஸ்காரர் ஒருவர் சாலையில் ஓட அவரை துரத்தினான் குப்பன். அந்த வழியாகச் சென்ற டூவீலரை மறித்து லிப்ட் கேட்டு தெறித்து ஓடினார் காவலர்.

சுமார் ஒரு மணி நேரமாக அட்ராசிட்டி செய்த பிறகு குப்பனே போதுமென நினைத்து அங்கிருந்து சென்று விட்டதாக தெரிவித்தனர் பொதுமக்கள். 

திருத்தணி மதுபிரியருக்கு டப் கொடுக்கும் வகையில் கோயம்புத்தூர் மதுபிரியர் ஒருவர் நடு சாலையில் சைக்கிளுடன் அட்ரா சிட்டியில் ஈடுபட்டார்.

சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் மதுபோதையில் சைக்கிளை நடுரோட்டில் போட்டு அதன் மீது உட்கார்ந்திருந்தார் ஒருவர். அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை ஓரமாக இருக்கலாமே எனக் கூற, வழி இருக்கு போய்க்கோ எனத் தெரிவித்தவர், சைக்கிள் மீது உட்கார்ந்துக் கொண்டே அதனை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.

இந்தியாவில் சட்டத் திட்டத்தை யாரும் மதிப்பதில்லை என அங்கலாய்த்துக் கொண்ட குடிமகனோ, நான் செத்தாலும் 500 பேருக்கு தண்ணீ வேண்டுமென உரிமைக்குரலும் எழுப்பினார். 

நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்பது போல நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும் மதுபிரியர் ஒருவர் சாலையில் படுத்து ரகளையில் ஈடுபட்டார்.

குமாரபாளையம் நகராட்சியில் குப்பை அள்ளும் வாகனத்தை தற்காலிக அடிப்படையில் ஓட்டி வந்தவர் மாதேஸ். மதுபோதையில் பணிக்கு வந்ததாக கூறி அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மதுபோதையில், தனது பணிநீக்கத்திற்கு நியாயம் கேட்டு ஒற்றை ஆளாக மறியலில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டார் மாதேஸ்.

பொதுமக்கள் அவரை குண்டு கட்டாக தூக்கி ஓரங்கட்டி விட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments