நான் ரெடி தான்... விஜய் பராக்..! அண்ணன் நான்.. இறங்கி வரவா... 234 தொகுதி நிர்வாகிகளை சந்தித்தார்..!

234 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களை நேரில் சந்தித்த நடிகர் விஜய், 2 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். நாளையும் ஆலோசனை தொடரும் நிலையில், அரசியல் பயணத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும், பூர்வாங்க தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. அந்தவகையில் 234 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை நேரில் அழைத்து விஜய் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, பிற்பகல் 2.25 மணிக்கு, சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். அப்போது, ரசிகர்கள் கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் சாரை, சாரையாக பின்தொடர்ந்தனர்...
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு, பிற்பகல் 2.40 மணிக்கு விஜய் வந்தபோது, அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அவரது காரை சூழ்ந்து கொண்டனர். அப்போது, போலீசார் கயிறு கட்டி, ரசிகர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, விஜய்யின் கார் உள்ளே செல்ல வழி ஏற்படுத்தினர்...
முதல் நாளான இன்று, சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, விருதுநகர், திருப்பூர், திருச்சி, அரியலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை, தனித்தனியே சந்தித்துப் பேசிய விஜய், புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
பூட்டப்பட்ட அறைக்குள், ஒவ்வொரு மாவட்ட மற்றும் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்த விஜய், தொகுதி நிலவரம், அங்குள்ள ஆதரவாளர்களின் நிலவரம், சமூக அக்கறை மற்றும் செல்வாக்குள்ள பிரபலங்களின் விவரங்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. கடன் வாங்க கூடாது, ஏழைகளுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள், பெற்றோரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. முதல்நாள் கூட்டத்தில் 300 பேர் பங்கேற்றனர்.
காவலர்களை அழைத்து அவர்களுடனும், விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், நெற்றியில் குங்குமம் இட்ட நிலையில் வெளியில் வந்த விஜய், ரசிகர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு நடந்து சென்று கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
வீட்டிற்கு செல்ல காரில் ஏற முயன்ற விஜய், அப்போது, மாற்றுத்திறனாளியான விஜய் மக்கள் நிர்வாகி ஒருவரை அருகில் அழைத்து, தொடர்ந்து நன்றாக பணி செய்யுமாறு வாழ்த்தியதோடு, புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
முன்னதாக, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சைவ விருந்து போடப்பட்டது.... செவ்வாய்க்கிழமை என்பதால், சைவ விருந்து போடப்பட்டதாக, விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்தனர்...
விஜய் வருவதற்கு முன்னதாக, கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், கட்டுக்கோப்பாக, ஒற்றுமையாக இருந்து விஜய்யின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார்...
மீதம் உள்ள 22 மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை, புதன்கிழமை, நடிகர் விஜய் சந்தித்துப் பேசுகிறார்.
Comments