அப்பாவ கொன்னது யாரும்மா... கேட்டு கேட்டு வெறியேறியதால் இறங்கி அடித்த இரு மகன்கள்.... மயிலை தாதா மர்கையா...!
சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளியான டொக்கன் ராஜா வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். 20 வருடங்களுக்கு முன்பு நடந்த தந்தையின் கொலைக்கு பழிக்கு பழியாக சினிமா பாணியில் சகோதரர்கள் அரங்கேற்றிய கொலை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்
சென்னை மயிலாப்பூர் பல்லக்குமா நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரபல ரவுடி சி.டி மணியின் கூட்டாளியான டொக்கன் ராஜா 7 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கொல்லப்பட்ட டொக்கன் ராஜா மீது கொலை , கொள்ளை, வழிப்பறி, கஞ்சா கடத்தல் என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு பாஜகவில் இணைந்த டொக்கன் ராஜா, வழக்கு ஒன்றில் சிறை சென்று கடந்த டிசம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
மயிலாப்பூர் பகுதியில் எதிரிகள் அச்சுறுத்தல் இருந்ததால், மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்தார். அவரது சகோதரர் மகள் பார் கவுன்சிலில் பதிவு செய்து திங்கட்கிழமையன்று முதல் நாளாக நீதிமன்றத்திற்கு செல்ல இருந்ததால், அவரை வாழ்த்தி வழி அனுப்புவதற்காக மயிலாப்பூர் வந்த போது டொக்கன் ராஜா,கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
கடந்த 2001ஆம் ஆண்டு மயிலாப்பூரில் டொக்கன் ராஜாவின் சகோதரர் ஜீவாவின் கும்பல் துரைக்கண்னு என்பவரை கொலை செய்ததாகவும், அதற்கு பதிலடியாக கடந்த 2003ஆம் ஆண்டு ஜீவாவின் கும்பலை சேர்ந்த பாலாஜி என்பவரை துரைக்கண்ணு கோஷ்டியினர் கொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது.
பாலாஜியின் இறுதி சடங்கு நடைபெறுவதற்குள் எதிர் தரப்பை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற ஆத்திரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய டொக்கன் ராஜா கும்பல், கண்ணில் தென்பட்டவர்கள் மீது எல்லாம் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில்தான் எந்த வித வழக்கிலும் தொடர்பில்லாத கறிக்கடைக்காரர் கதிரவன் என்பவர் சிக்கி பலியாகியுள்ளார். கொலையுண்ட கதிரவனின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்ப்பிணியாக இருந்த நிலையில் தனது ஒன்றரை வயது மகன் நரேஷ்குமாரை அழைத்துக் கொண்டு துரைப்பாக்கத்துக்கு குடி பெயர்ந்தார்.
இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு மகேஷ்குமார் என பெயரிட்ட அவர், கிடைக்கும் வேலைகளை செய்து இரு மகன்களையும் படிக்க வைத்துள்ளார். இரு பிள்ளைகளும் தங்கள் தாயிடம் அவ்வப்போது தந்தை குறித்து கேட்கும் போதெல்லாம், அவரை ரவுடிக் கும்பல் வெட்டிக் கொலை செய்ததாக கூறி தாய் கண்ணீர் விட்டுள்ளார். இது அந்த இரு சகோதரர்களின் மனதிலும் தீரா வெறியை உண்டாக்கி உள்ளது.
தற்போது இளைஞர்களாக ஆகி விட்ட நரேஷ் குமார் மற்றும் மகேஷ் குமார் ஆகிய இருவரும் தங்கள் கல்லூரி மற்றும் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு, தனது தந்தையை கொலை செய்த டொக்கன் ராஜாவை பழி தீர்த்தே ஆக வேண்டுமென கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டு உரிய நேரம் பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ரவுடி டொக்கன் ராஜா சில தினங்களாக பல்லக்கு மாநகரில் சுற்றி திரிவதை அறிந்து இருவரும் தனது நண்பர்களுடன் அதிரடியாக புகுந்து டொக்கன் ராஜாவை வெட்டி வீசி பழித்தீர்த்ததாக தெரிவித்த போலீசார் தப்பியோடிய சகோதரர்கள் உள்ளிட்ட கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
தமிழ் சினிமா பாணியில் 20 வருடங்கள் காத்திருந்து பழிக்கு பழியாக அரங்கேற்றப்பட்ட இந்த சம்பவம் மயிலை பல்லக்குமா நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments