தொடரும் பாரம்பரியம்போல் மாறிய கொலைச் சம்பவங்கள்.! காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை..!

0 1631

கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் அண்ணனை கொன்றதாக 5 பேரை பழித்தீர்க்க பல ஆண்டுகால பகையோடு, ஸ்கெட்ச் போட்டு காத்திருந்த தம்பி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, நாட்டு வெடிகுண்டு வீசி, ஒருவரை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்...

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே, வியாழக்கிழமை அன்று, மர்ம கும்பலால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு, அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த லோகேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான போலீசாரின் விசாரணையில், தனது அண்ணனை கொன்ற கொலையாளிகள், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானதை அறிந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவானது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில், பாலாஜி என்பவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக பீர்க்கங்கரணை போலீசார் பதிவு செய்த வழக்கில், பாஸ்கர், அவரது தம்பி லோகேஷ், நண்பர்கள் குமார், சீனா, மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறை சென்று பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

ஜாமீனில் வந்த ஐவரில் ஒருவரான பாஸ்கர் என்பவரை, பாலாஜியின் தம்பி விவேக், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகின்றது. மேலும், பாஸ்கரின் கூட்டாளியான குமார் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், எஞ்சிய லோகேஷ், மோகன், சீனா ஆகியோரை கொல்ல, விவேக் தரப்பு தொடர்ந்து முயற்சிப்பதாக சொல்லப்படும் நிலையில், கடந்தாண்டு தாம்பரம் நீதிமன்றம் அருகே கொலை முயற்சி தோல்வியடைந்ததாக போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், வியாழனன்று செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணை வந்த 3 பேரில், 2 பேர் தப்பிவிட, லோகேஷ் என்பவர் மீது, மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்கியுள்ளது. அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில், விவேக் தரப்பு இருப்பதாக, போலீசார் சந்தேகிக்கும் நிலையில், தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ராகுல், தனசேகரன், பிரவீன்குமார், லோகேஷ், அரவிந்த்குமார், ரூபேஷ், சாம்சன்மோசஸ் ஆகிய 7 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். நீதிபதி கமலா சிறையிலடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அனைவரும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments