போட்டோ எடுத்து போலீசிடம் போட்டுக் கொடுப்பியா மாப்ள...? டிரிபிள்ஸ் கொடுத்த ட்ரபுள்ஸ்..! இளைஞரை பின்னி எடுத்த பெண்கள்

0 3374

இருசக்கர வாகனத்தில் 3 பெண்கள் பயணித்ததை புகைப்படம் எடுத்து சென்னை காவல்துறையின் டுவிட்டரில் புகாராக பதிவிட்ட இளைஞரை, 2 பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அடையாறில் அரங்கேறி உள்ளது.

இந்த 3 பெண்களும் போக்குவரத்து விதியை மீறி டிரிபிள்ஸ் செல்வதை புகைப்படமாக எடுத்து சென்னை காவல்துறையினரின் டுவிட்டரில் புகார் அளித்ததால் தாக்குதலுக்குள்ளான இளைஞர் இவர் தான்..!

சென்னை அடையாறு எம்ஜிஆர்.ஜானகி கல்லூரி எதிரே பேருந்து நிலையத்தில் நின்று போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியாக சாலையில் வந்து கொண்டிருந்த மூன்று பெண்கள் ஒரே வாகனத்தில் பயணித்துள்ளனர். இதனை மடக்கி பிடித்து போக்குவரத்துக் காவல் துறை காவலர் ராஜேஷ் விளக்கம் கேட்டபோது உடல்நிலை சரியில்லை என கூறி அங்கிருந்து வேக வேகமாக தனது ஆண் நண்பர்களுடன் வாகனத்தை எடுத்து சென்று புறப்பட்டதாக கூறப்படுகிறது

அங்குள்ள கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்த சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த அருண் குமார் விக்ரம் என்பவர் மூன்று பெண்களையும், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் புகைப்படம் எடுத்து பெருநகர சென்னை காவல்துறையின் டுவிட்டரில் புகாராக பதிவு செய்ததாக கூறப்படுகின்றது

தங்களை இளைஞர் புகைப்படம் எடுப்பதை கண்டுவிட்ட முகமூடி பெண்களில் இருவர், அவரை தாக்கி, அவதூறாக பேசி பட்டபகலில் பலரது முன்னிலையில், செருப்பை கழட்டி அடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவல்துறை காவலர் ராஜேஷ் , இருபெண்களையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.

அந்த மூன்று பெண்களும் ஒரே வாகனத்தில் பயணிக்க முயன்ற போது போக்குவரத்து காவலர் ராஜேஷ் மூவரையும் எச்சரித்து வாகனத்தை தள்ளி செல்லும் படி அறிவுறுத்தினார். இதனால் வண்டியே வேண்டாம்.. என்று இரு பெண்கள் நடந்து செல்ல... அதில் ஒரு பெண்ணை அவரது ஆண் நண்பர் அழைத்துச்சென்றார்

தன்னை தாக்கிய பெண்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை அபிராமிபுரம் காவல் நிலையத்தில் அருண்குமார் விக்ரம் புகார் அளித்தார். அதில் தன்னை தாக்கிய பெண் ,போலீஸ்காரரின் மகள் என்றும் தன்னை புகைப்படம் எடுத்து ஒன்னும் செய்ய முடியாது என்று மிரட்டி சென்றதாக தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை காவல்துறையின் டுவிட்டரில் போக்குவரத்து விதிமீறல் குறித்து புகைப்பட ஆதாரத்துடன் புகார் அளித்தால் போலீசார் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக அபராதம் விதித்து வருவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments