2 மாதங்களுக்கு முன் திருமணம்.. மனைவி 4 மாதமாக கர்ப்பம்?.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்..!

சிதம்பரம் அருகே மனைவி கர்ப்பமானதில் சந்தேகமடைந்து, பிளேடால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சிலம்பரசனுக்கும், மயிலாடுதுறையைச் சேர்ந்த எம்.எஸ்.சி பட்டதாரியான ரோஜாவுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தான் கர்ப்பம் அடைந்ததாக கணவனிடம் ரோஜா கூறினார். அப்போது முதல் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு தகராறு முற்றி வீட்டுப் படுக்கையறையில் ரோஜாவின் கழுத்தை சிலம்பரசன் பிளேடால் அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், தப்பியோடிய சிலம்பரசனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, தங்களுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதாகவும், ஆனால் தன்னுடைய மனைவி 4 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியதாகவும் சிலம்பரசன் தெரிவித்தார்.
ரோஜா அடிக்கடி யாரிடமோ செல்போனில் பேசி வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாம் ரோஜாவை கொலை செய்ததாகவும் சிலம்பரசன் ஒப்புக் கொண்டதாக போலீசார் கூறினர். இதையடுத்து சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர்.
Comments