தண்டவாளத்தில் தாறுமாறு.. ரெயில்வே கேட்டை மூட விடாமல் திமுகவினர் அட்ராசிட்டி.. போலீசால் தப்பியது பள்ளி வாகனம்..!

0 10884

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வருகைக்காக மூடிக் கொண்டிருந்த ரெயில்வே கேட்டை மூட விடாமல் பேரணியாக சென்ற திமுகவினரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் ஒன்று தண்டவாளத்தில் சிக்க நேர்ந்தது. உதவி ஆய்வாளர் ஒருவர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது...

நெல்லையில் இருந்து மும்பை நோக்கிச்செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வருகைக்காக மூடிக் கொண்டிருந்த ரெயில்வே கேட்டை மூட விடாமல் தடுத்து பழனி எம்.எல்.ஏ மற்றும் எம்.பியை ஊர்வலமாக அழைத்துச்சென்ற விபரீத காட்சிகள் தான் இவை..!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 13-வதுவார்டுக்குட்பட்ட ஏட்டு நாயக்கர் காலனியில் 13-லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் கல்சாலை அமைக்கும் பணிக்கு, பூமிபூஜை நடந்தது. இதில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளரும், பழனிசட்ட மன்ற உறுப்பினருமான, ஐபி. செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உள்ளிடோரை பட்டாசு வெடித்தும், சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டும் வரவேற்றனர்

ஏராளமான இருசக்கரவாகனங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கார்களில், ஊர்வலமாக சென்ற திமுகவினர் , கொடைரோடு ரயில்வே கேட் பகுதிக்கு வந்தனர். அப்போது மாலை 6:20 மணிக்கு, நெல்லையிலிருந்து மும்பை தாதர் செல்லும் அதிவிரை இரயில் செல்வதற்கான சிக்னல் கொடுக்கப்பட்டு, எச்சரிக்கை மணி ஒலிக்க ரயில்வேகேட்டை ரயில்வேகீப்பர் அடைத்துக்கொண்டிருந்தார்.

இறங்கிய ரெயில்வே கேட்டை அடைக்க விடாமல் திமுகவினர் தங்கள் எம்.எல்.ஏ , எம்.பி மற்றும் கட்சி நிர்வாகிகளின் கார்களை அணிவகுத்து செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

அவர்களை பின்பற்றி மற்ற வாகனங்களும் அணிவகுக்க சரியாக பள்ளி வாகனம் ஒன்று தண்டவாளத்தில் நின்றது, அதற்கு பின்னார் ஒரு வாகனம் நின்றது. இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் சத்தமிட, உதவி ஆய்வாளர் கருப்பையா என்பவர் துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்தில் நின்ற வாகனங்கள் விரைவாக கடந்து செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

இருபுறமும் ரெயில்வே கேட் மூடிய சில வினாடிகளில் தாதர் எக்ஸ்பிரஸ் மின்னல் வேகத்தில் அந்த இடத்தை கடந்து சென்றது. வாகனங்கள் ஏதாவது தண்டவாளத்தில் சிக்கி இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்றும் இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதே நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்ட பின்னர் அதற்குள் நுழைந்து செல்வது ரெயில்வே சட்ட விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றம். அதே போல ரெயில்வே கேட்டை மூட விடாமல் தடுத்து வாகனங்களை இயக்குவது விபத்துக்கள் நேர வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப்படும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments