ஆளுநருக்கு அதிகாரம் உண்டா.? இல்லையா.? 5 ஆண்டுகளில் நிலைப்பாடு மாறியது ஏன்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி...!
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது, ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறுவதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கைக்குள் செல்ல விரும்பவில்லை என்றார். அதேவேளையில், அமைச்சரவையில் இடம்பெறும் ஒருவரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என, 1971ஆம் ஆண்டில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான வழக்கில், உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, அண்ணாமலை கூறியுள்ளார்.
தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அமைச்சர் சி.விஜயபாஸ்கரை, குட்கா வழக்கில், பதவி நீக்கம் செய்ய ஆளுநரை வலியுறுத்தியதாக, அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், சட்ட வல்லுநர்களை குறிப்பாக, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர்களை கலந்து ஆலோசித்து, சடத்திற்கு உட்பட்டே முடிவெடுக்க வேண்டும் என்றும், அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Comments