டிஸ்மிஸ் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை... யோசிக்காமல் அவசர கதியில் முடிவு.... விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை.....
செந்தில்பாலாஜியை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் எடுத்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட போதிலும், முடிவெடுப்பதில் யாருக்கு அதிகாரம் உண்டு என்பது பற்றிய விவாதம், நாடு முழுவதும், அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கிறது. இதற்கிடையே, அவசர கதியில் ஆளுநர் முடிவெடுத்திருப்பதாகவும், அதை தமிழக அரசு முற்றாக நிராகரிப்பதாகவும், அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக, ஆளுநர் எடுத்து முடிவை சட்ட ரீதியாக அணுவது பற்றி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்திற்கு பின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி மற்றும் மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான வில்சன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, யாருடைய ஆலோசனையையும் பெறாமல், அவசர கதியில், ஆளுநர் முடிவெடுத்திருப்பதாக, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவின்படியோ அல்லது அமைச்சரவைக்கு தலைமையேற்றுள்ள முதலமைச்சரின் பரிந்துரைப்படியோ இல்லாமல், அமைச்சர் பதவி நீக்கம் தொடர்பாக தன்னிச்சையாக ஆளுநர் முடிவெடுப்பாரானால், அது செல்லாது என்றும், அதற்கான அதிகாரம் இல்லை என, இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்திருப்பதாக, திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் கூறினார்.
செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வதால், விசாரணை பாதிக்கப்பட கூடும் என்ற ஆளுநரின் கருத்து குறித்து கேள்விக்கு பதிலளித்த, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதால், எந்த விசாரணையும் பாதிக்கப்படாது என்றார்.
Comments