தலையின் பின்பக்கம் வீங்கும் விசித்திர நோய்.. குழந்தை உயிருக்கு ஆபத்து..! காப்பாற்ற கோரி தாய் கண்ணீர்
தலையின் பின்புறம் வீங்கும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டரை வயது குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவிகோரி தாய் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு மருத்துவமனையால் கைவிடப்பட்ட நிலையில் குழந்தையின் உயிர்காக்க போராடும் சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
பிறந்தது முதல் தற்போது வரை விசித்திரமான முறையில் தலையின் பின்பக்கம் வீங்கும் நோயால் அவதிப்பட்டு வரும் தன் குழந்தையின் உயிர்காக்க போராடும் தாயின் கண்ணீர் வேண்டுகோள் தான் இது.
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த மெக்கானிக் வினோத்குமார் - காயத்ரி தம்பதியினரின் இரண்டரை வயது குழந்தை சாய் சஞ்சித். பிறந்தது முதலே குழந்தை சாய் சஞ்சித்திற்கு, சகிட்டல் ஷைனோஸ்டொசிஸ் (Sagittal synostosis) என்கிற, தலையின் பின் பக்கம் வீங்கும் விசித்திர நோய் இருந்துள்ளது.
இதனை பிறந்து 4 மாதங்களிலோ அல்லது 1 வயதிலோ அறுவை சிகிச்சை மூலம் சரி செய்திருக்க முடியும் என்ற நிலையில் பெற்றோர் அரசு மருத்துவமனையை நாடியுள்ளனர். அவர்கள் அறுவை சிகிச்சை செய்தாலும் குழந்தைக்கு குணமாகாது என்றும் அதற்குரிய வசதிகள் தங்களிடம் இல்லை என்று கூறி கைவிரித்து விட்டதாக கூறப்படுகின்றது
தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இதற்கு உரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று சில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது கணவர் அன்றாடம் உழைக்கும் பணம் குடும்ப செலவுகளுக்கே சரியாகும் நிலையில் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான 4 1/2 லட்சம் ரூபாயை திரட்ட இயலாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார் தாய் காயத்திரி.
தற்போது 50 சதவீதம் வரை தலையின் பின் பக்கம் வீங்கி உள்ள நிலையில் இதே நிலை தொடர்ந்தால் அது தனது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் தமிழக முதலமைச்சர் தனது குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நோய் குறித்து விளக்கம் அளித்துள்ள நரம்பியல் மருத்துவர் ராதாகிருஷ்ணன், இந்த நோய் லட்சத்தில் ஒரு குழந்தைக்கு வரும் என்றும் குறித்த காலத்திற்கு முன்னதாகவே மண்டை ஓடு முழுமையான வளர்ச்சி அடைந்து மூளையின் செயல் திறனை பாதிக்கும் என்று சுட்டிக்காட்டினர், மூளையை சுற்றியுள்ள மண்டைஓட்டை பிளந்து சிறிய அளவிலான பிளேட் வைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 80 சதவீதம் சரியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
Comments