தனியார் பேருந்தில் சத்தமா ஒலித்த பாட்டு.. எரிச்சலடைந்த நீதிபதி..! ஒரு வேள அந்த பாட்டா இருக்குமோ..?
காஞ்சிபுரத்தில் இயக்கப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் பயணிகளுக்கு எரிச்சலூட்டும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிக்கப்பட்ட நிலையில் அந்த பேருந்தில் பயணித்த நீதிபதி அளித்த புகாரின் பேரில் பேருந்து ஓட்டுனருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் தமிழகத்தில் ஓடும் தனியார் பேருந்துகளில் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு செல்லும் பயணிகளை குதூகலப்படுத்த காதுகளுக்கு இனிமையான பாடல்கள் மிதமான சத்தத்துடன் ஒலிக்கப்பட்டது..!
தற்போது கால மாற்றத்துக்கு ஏற்ப இளசுகளை தாளம் போட வைக்கும் வகையில், காதுகளுக்கு இறைச்சலான இசையுடன் கூடிய புதிய பாடல்களை ஒலிக்கவிட்டு ஓட்டுனர்கள் அதிவேகம் காட்டுவதால் பயணிகள் எரிச்சல் அடைவதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் காஞ்சிபுரத்தில் சத்தமாக பாடலை ஒலிக்கவிட்டு பேருந்து ஓட்டிய தனியார் பேருந்து ஓட்டுனர் ஒருவர் நீதிபதியிடம் வசமாக சிக்கி இருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செம்மல், தனது சொந்த வேலையாக திண்டிவனம் சென்று விட்டு காஞ்சிபுரத்திற்கு நாராயணமூர்த்தி என்ற தனியார் பேருந்தில் திரும்பியுள்ளார்.
வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அவர் பயணம் செய்த பேருந்தில் சினிமா பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிக்க விட்டு பேருந்து இயக்கப்படுவதை கண்டு எரிச்சலைடைந்து பேருந்து நடத்துனரிடம் சத்தத்தை குறைக்க கூறி தனது உதவியாளர் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத நடத்துனர் தனது வேலையை பார்த்துள்ளார். நீதிபதி செம்மல் மீண்டும் ஓலியினை குறைக்குமாறு கூறிய நிலையிலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அதனை அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
அரைமணி நேரமாக பாடலை நிறுத்த மறுத்ததால் தன்னை நீதிபதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஆக்ஷனில் இறங்கினார் செம்மல். காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறைக்கு செல்போன் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் தயாராக நின்ற போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ், காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே நாரயண மூர்த்தி பேருந்தை நடுவழியில் நிறுத்தினர்.
அதிக சத்தத்துடன் பாடல் ஒலிக்கவிட்டது ஏன்? எனக்கேட்டு பேருந்து ஓட்டுனருக்கு போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். உதவி ஆய்வாளரின் செல்போன் மூலம் நீதிபதியிடம் பேசிய ஓட்டுனர் தனக்கு எதுவும் தெரியாது சார், என்னிடம் சொல்லி இருந்தால் சார், பாட்டையே நிறுத்தி இருப்பேன் சார்..என்று சார்.. சார் .. என பதறினார்.
இந்த பிரச்சனைக்கு மூல காரணமான நடத்துனரோ, தனக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லாத பச்ச புள்ள போல விழித்துக் கொண்டிருந்தார்.
நடத்துனரை அழைத்த போக்குவரத்து காவல்துறையினர், பயணிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். முன்னதாக பேருந்தில் பயணம் செய்த நீதிபதி செம்மல் தனது பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.
Comments