600க்கு 574 மதிப்பெண் பெற்றும் தாய், தந்தை, சகோதரியை இழந்து படிக்க இயலாமல் தவிக்கும் மாணவி..! உதவிக்கரங்களை நீட்டுங்கள்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே சில வாரங்களுக்கு முன்பு தாய், தந்தை, சகோதரியை விபத்தில் பறிகொடுத்த நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 574 மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவி ஒருவர், மேற்படிப்புக்கு உதவக் கோரி அரசுக்கு வேண்டுகேள் விடுத்துள்ளார்.
அப்பாவும் இல்லை... அம்மாவும் இல்லை.. படிப்பிற்கு ஆதரவாக இருந்த அக்காவும் இல்லை.. மூவரையும் விபத்தில் பறிகொடுத்துவிட்டு நிற்கதியாய்த் தவிக்கும் அரசுப் பள்ளி மாணவி அமுதா இவர் தான்..!
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள கல்பாரபட்டியைச் சேர்ந்த விசைத்தறி கூலித் தொழிலாளி வெங்கடாசலம் - மாரியம்மாள் தம்பதியினருக்கு பூங்கொடி மற்றும் அமுதா ஆகிய இரண்டு மகள்கள். இவர்களில் பூங்கொடிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இளம்பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த அமுதா 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 574 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
இதனால் சந்தோஷமடைந்த குடும்பத்தினர் அமுதாவை திருச்செங்கோட்டில் உள்ள முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் 2,500 ரூபாய் பணம் கட்டி மேல்படிப்பிற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி தந்தை வெங்கடாசலம், தாய் மாரியம்மாள், அக்கா பூங்கொடி ஆகிய மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சேலம் உத்தமசோழபுரம் அருகே விபத்துக்குள்ளாகி மூன்று பேரும் உயிரிழந்து விட்டதால் ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அமுதா.
ஒரே நேரத்தில் அப்பா, அம்மா, அக்காவை பறிகொடுத்துவிட்டு நிற்கதியாக தவிக்கும் அமுதாவுக்கு ஒரே ஆறுதல் அவரது பாட்டி மட்டுமே. கல்லூரியில் சேர விண்ணப்பபித்தாலும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே படிக்க இயலும் என்ற நிலை... ஒருபுறம்..! எங்கே செல்வது ? யாரை பார்ப்பது ? யார் உதவுவார்கள் ? என்று தெரியாமல் கனத்த இதயத்துடன் பரிதவித்து நிற்கிறார் அமுதா.
தானும் படித்து பட்டம் பெற்று, ஏழை எளியோருக்கு உதவும் வகையில் பச்சை மையில் கையெழுத்திடும் நிலைக்கு உயர வேண்டும் என்ற ஆசையும் லட்சியமும் தனக்கு இருப்பதாக தெரிவித்த அமுதா, தனது கல்லூரிப் படிப்பை மேற்கொள்ள தமிழக அரசோ தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ உதவி புரிய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்
கடந்த வாரம் வரை கல்விச்செலவுக்கு உதவுவதாக கூறிய மாவட்ட ஆட்சியரின் உதவியும் தனக்கு வந்து சேராத நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீருடன் காத்திருக்கிறார் அமுதா..!
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்... ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்ன யாவினும் புண்ணியம் கோடியாம் ஆதரவற்ற இந்த மாணவி அமுதாவின் உயர் கல்விக்கு உதவுதல்..!
Comments