பிஷப்பை சரமாரியாக அடித்து ஓட விட்ட எம்.பியின் ஆதரவாளர்கள்.... பிரபல யூடியூப் பிஷப் ஓட்டம்...!
நெல்லை ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் பொறுப்பில் இருந்து எம்.பி ஞானதிரவியம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் , சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய நிலையில் அங்கு சென்ற பிஷப் ஒருவரை சரமாரியாக தாக்கி ஓட விட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
நெல்லை சி.எஸ்.ஐ திருமண்டல அலுலகத்தை பூட்டி வைத்துக் கொண்டவர்களை தட்டிக்கேட்டதால் பிஷப் அடித்து விரட்டப்பட்ட காட்சிகள் தான் இவை..!
நெல்லை பாராளுமன்ற எம்.பியாக இருப்பவர் திமுகவின் ஞானதிரவியம். இவர் வகித்து வந்த நெல்லை மாவட்ட சி.எஸ்.ஐ திருமண்டலத்தின் கல்வி நிலைக்குழு செயலாளர், மற்றும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் ஆகிய இரு பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பேராயர் பர்னபாஸ் உத்தரவிட்டார். ஜான்ஸ் பள்ளி தாளாளராக வழக்கறிஞர் அருள் மாணிக்கம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை கண்டித்து ஞானதிரவியம் ஆதரவாளர்கள் பள்ளி வளாகத்தில் வாக்குவாதம் செய்ததுடன், திங்களன்று நெல்லை மாவட்ட சி.எஸ்.ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தை இழுத்துப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வேறு எவரும் உள்ளே நுழையாதபடி நின்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊழிய ஸ்தானத்தின் பிஷப் காட்பிரே நோபல் என்பவர் அந்த அலுவலகத்துக்குச் சென்றார்.
காட்பிரே நோபலை தடுத்து நிறுத்திய சிலர் அவரை சரமாரியாக அடித்து விரட்டி, தாக்கி ஓடவிட்டனர். போலீசார் முன்பாகவே இந்த தாக்குதல் நடந்தது.
இதில் காயம் அடைந்த பிஷப் காட்பிரே நோபல் காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னை எம்.பி. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் அடித்து தாக்கி கொலை செய்ய முயன்றதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள பிஷப், எம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல் அமைச்சருக்கு வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார்
இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பு புகார்களை பெற்று போலீசார் விசாரித்து வருகின்றனர்
Comments