அம்மா, அப்பா தான் உண்மையான ஹீரோ... மாணவர்களை கலங்க வைத்த தாமுவின் 'மாஸ்' பேச்சு...!
மாணவர்கள் தங்கள் தாய் தந்தை தான் உண்மையான கதாநாயகர்கள் என்பதை உணர வேண்டும் என்று நடிகர் தாமு கூறினார். பிள்ளைகளுக்காக தாய் தந்தையர் படும் கஷ்டத்தைப் பற்றி தாமு பேசப் பேச, மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களை மறந்து கண் கலங்கினர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் பேசினார் நடிகர் தாமு. நடிகர்கள் ரசிப்பது தவறில்லை என்றாலும், உண்மையான கதாநாயகர்கள் தங்கள் தாய், தந்தை தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்றார் அவர்.
மாணவர்களிடையே தமது பள்ளிப் பருவ அனுபவத்தை பகிர்ந்து கொண்ட தாமு, தம்மை முதன் முதலில் ஊக்குவித்தது, ஆசிரியர்கள் தான் என்றார்.
போதைப் பழக்கத்தை கைவிட்டால், பாதை தென்படும் என்று குறிப்பிட்ட தாமு, மாணவர்கள் எந்தச் சூழலிலும் போதைக்கு அடிமையாகக் கூடாது என்றார்.
தாமுவின் கலகலப்பான பேச்சுக்கு கைதட்டி சிரித்து மகிழ்ந்த மாணவர்கள், ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்காக தாய், தந்தையர் படும் சிரமத்தைப் பற்றி உருக்கமான பேசியதை கேட்டு கண் கலங்கினர். பெற்றோரும் ஆசிரியர்களும் கூட தாமுவின் பேச்சைக் கேட்டு கண்ணீர் விட்டனர்.
வாழ்க்கையில் தவறு செய்தவர்கள் திருந்துவதற்கு ஏதோ ஒரு தருணம் போதுமானது என்று குறிப்பிட்ட நடிகர் தாமு, அந்தத் தருணம் இந்தக் கணமாகக் கூட இருக்கலாம் என்றார். பாலிமர் செய்திகளுக்காக செய்தியாளர் ஜானகி ராமன்.
Comments