கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்து குழந்தைகளை மிரட்டிய கஞ்சா குடிக்கி...! வீட்டிற்குள் வைத்து பூட்டிய பெண்...!

0 2221

காஞ்சிபுரத்தில் கஞ்சா போதையில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து கத்தியைக் காட்டி குழந்தைகளை மிரட்டி, பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியவரை வீட்டிற்குள் வைத்து பூட்டினார் பெண் ஒருவர். தகவலின் பேரில் வந்த போலீஸார் அந்த இளைஞரை கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ளது ஏகனாம்பேட்டை செல்லியம்மன் நகர் பகுதி. கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் 3 இளைஞர்கள் கையில் பட்டா கத்தியுடன் அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதில் ஒருவன், திறந்திருந்த கலைவாணி என்பவரின் வீட்டுக்குள் நுழைந்ததாகவும், மற்ற 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. கத்தியுடன் ஒருவன் வீட்டிற்குள் நுழைந்ததை டிவியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த கலைவாணியின் 2 குழந்தைகளும் பார்த்து பயத்தில் அலறினர். அவர்களை அவன் மிரட்டியதால், வீட்டை விட்டு வெளியே ஓடி, வெளியே நின்றிருந்த தனது தாயிடம் குழந்தைகள் தகவல் தெரிவித்தனர்.

கலைவாணியும் வீட்டிற்கு வந்த போது அவரையும் அவன் மிரட்டியதாக கூறப்படுகிறது. எனவே, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் முன் மற்றும் பின் பக்க கதவுகளை பூட்டினார் கலைவாணி.

இதுகுறித்து, வாலாஜாபாத் போலீஸாருக்கு தகவலும் தெரிவித்தார் கலைவாணி.

தன்னை வெளியே விடுங்கள் என மிரட்டிய அந்த போதை ஆசாமி, கையில் வைத்திருந்த கத்தியால் வீட்டிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடி, பிரிட்ஜ் மற்றும் சமையல் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினான். பின்னர், உள்பக்கமாக தாழ்ப்பாளும் போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டிலிருந்த போதை இளைஞரை அழைத்தும் வெளியே வரவில்லை. எனவே, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது போதையில் அவன் மயங்கி கிடந்ததாக தெரிவித்தனர் போலீஸார்.
தட்டி எழுப்பி கொத்தாக தூக்கிய போலீஸார், அவனிடமிருந்த பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், பிடிபட்டது வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பது தெரிய வந்தது. அவனை கைது செய்த போலீஸார், ரகளையில் ஈடுபட்ட மற்ற 2 பேர் குறித்து விசாரணை நடத்தினர்.

கஞ்சா போதையில் வீட்டிற்குள் நுழைந்தவர் குழந்தைகளை மிரட்டி, பொருட்களை சேதப்படுத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments