பெலாரஸ் அதிபர் தலையீடு... பின்வாங்கினார் பிரிகோஷின்... ரஷ்யாவில் முடிவுக்கு வந்தது போர் பதற்றம்..!

0 1665

ரஷ்யாவிற்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டு மாஸ்கோ நோக்கி முன்னேறி சென்ற வாக்னர் ஆயுதக்குழு தளபதி பிரிகோஷின், பெலாரஸ் அதிபர் நடத்திய பேச்சுவார்த்தையால் போர் தொடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கினார். 24 மணி நேரமாக நீடித்த போர் பதற்றம் முடிவுக்கு வந்ததால் ரஷ்யர்கள் ஆரவாரம் செய்து பிரிகோஷினை வழியனுப்பி வைத்தனர்.

ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றுவரும ரஷ்யா - உக்ரைன் போரில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவால் களமிறக்கப்பட்ட கூலிப்படை தான் வாக்னர் ஆயுதக்குழு. ரஷ்ய அதிபர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட பிரிகோஷின் தலைமையின் கீழ் இயங்கி வந்த வாக்னர் குழு, மரியுபோல், பாக்முத் போன்ற நகரங்களை கைப்பற்ற ரஷ்யாவிற்கு உதவியது. இதற்கிடையே ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கே ஷைகுவிற்கும், வாக்னர் தளபதி பிரிகோஷினுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

செர்கே ஷைகு எடுத்த மோசமான முடிவுகளால் ஆயிரக்கணக்கான வாக்னர் வீரர்கள் உயிரிழந்து வருவதாக குமுறிய பிரிகோஷின், வெள்ளிக்கிழமை ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் வாக்னர் வீரர்கள் 2,000 பேர் கொல்லப்பட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதற்கு பழி தீர்க்க மாஸ்கோவை கைப்பற்றபோவதாக அறிவித்த பிரிகோஷின், தனது படை வீரர்கள் 25,000 பேருடன் ரஷ்யாவிற்குள் நுழைந்து ராஸ்டவ் நகரிலுள்ள முக்கிய ராணுவ தலைமையகத்தை கைப்பற்றினார்.

வாக்னர் குழு முதுகில் குத்திவிட்டதாக குற்றம்சாட்டிய ரஷ்ய அதிபர் புடின், ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்தார். அதனை பொருட்படுத்தாமல் மாஸ்கோ நோக்கி முன்னேறி சென்ற வாக்னர் படைகள் மீது ரஷ்ய ஹெலிகாப்டர்கள் ஆங்காங்கே வான் தாக்குதல் நடத்திவந்தன.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடின் கேட்டுக்கொண்டதற்கிணங்க பெலாரஸ் அதிபர் லூகாஷென்கோ பிரிகோஷினுடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. ரஷ்ய ராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சியில் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தப்படவில்லை எனத் தெரிவித்த பிரிகோஷின், மாஸ்கோவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் முகாமிட்டிருந்த வாக்னர் படைகளை உக்ரைனுக்கே திரும்புமாறு உத்தரவிட்டார். ரஷ்யாவிலிருந்து பெலாரஸுக்கு செல்ல பிரிகோஷினுக்கு அனுமதி அளித்த ரஷ்ய அரசு அவர் மீது பதியப்பட்ட கிரிமினல் வழக்குகளை திரும்ப பெற்றது. படை பரிவாரங்களுடன் ராஸ்டவ் நகரிலிருந்து புறப்பட்ட பிரிகோஷினை, உற்சாக ஆரவாரத்துடன் ரஷ்யர்கள் வழியனுப்பிவைத்தனர். இதையடுத்து ரஷ்யாவில் 24 மணி நேரமாக நீடித்த போர் பதற்றம் முடிவுக்கு வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments