கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச்சாராய விற்பனை படுஜோர்.. "24 ஹவர்ஸ் கிடைக்கும்" ஆதாரமாக சிக்கிய காட்சிகள்!

0 1591

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச் சாராய விற்பனை நடைபெற்று வருவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது....

கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ள கல்வராயன் மலையில்,நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூகவிரோதிகள் சிலர் பேரல் பேரல்களாக கள்ளச்சாராயம் காய்ச்சி அவற்றை மலையடிவாரத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். மலைக் கிராமங்கள் என்பதால், அங்கு விற்கப்படுவது வெளியே தெரியாததால், கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்க அதிகாலை முதலே இளசுகள் முதல் பெருசுகள் வரை பலரும் குவிகின்றனர்.

ஊர் பொதுமக்களும் இதற்கு துணைபோவதால், ஊருக்கு ஊர் ஏலம்விடப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் கள்ளச்சாராயம் விற்பனையை தொடர்ந்து நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய சமூக ஆர்வலர்கள், பேட்டரி மூலப் பொருட்களை வைத்து சாராயம் காய்ச்சுவதால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், காவல்துறையில் கறைபடிந்த அதிகாரிகள் சிலர் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதால், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தின் தலைநகரமாக கல்வராயன் மலை மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதற்கு ஆதாராமாக, அண்மையில் கல்வராயன் மலையடிவாரத்திலுள்ள வீட்டில் குளியலறையில் கேன்களில் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்து, அதனை கட் அண்ட் ரைட்டாக 100 ரூபாய்க்கு தான் விப்பேன்.. என்று ஒருவர் கூறும் காட்சிகளும்,

முதியவர் ஒருவர் குடிநீர் வாட்டர் கேனில் அளந்து கள்ளச்சாரத்தை விற்பது உள்ளிட்ட வீடியோ காட்சிகளும் கள்ளச்சாராய விற்பனையை அம்பலப்படுத்தி உள்ளன.

கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சாராய விற்பனையை முழுவதுமாக தடைசெய்து, கள்ளச்சாராயம் இல்லா கல்வராயன் மலையை உருவாக்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments