தாயின் தகாத உறவுகள்..! வீடுகளுக்கு தீ வைத்து அலற விட்ட மகள்..!! தாயை திருத்த மகளின் விபரீத போராட்டம்....!

0 2553

ஆந்திர மாநிலத்தில் பல ஆண்களோடு தொடர்பில் இருந்த தாயை திருத்துவதற்காக விபரீத முடிவெடுத்த மகள், தாயோடு தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளுக்கு தீ வைக்க, அலறிப் போன அந்த கிராமமே பில்லி, சூனியம், ஏவல் பயத்தில் மந்திரவாதிகளை அழைத்து வந்து பூஜைகள் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

திடீர் திடீரென வீடுகளில் உள்ள பொருட்கள் தீப்பற்றி எரிவதும், வைக்கோல் போர்கள் தீயில் எரிவதுமாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பாகவும் பில்லி சூனிய பீதியிலும் உறைந்திருந்த கிராமம் தான் புதிய சேனம்பட்லா. ஆந்திராவின் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி அருகே உள்ள சிறிய கிராமமான இந்த சேனம்பட்லாவில், ஒருசில வீடுகளுக்குள் இருந்த பொருட்களும் எதிர்பாராத விதமாக பற்றி எரிந்தன. 

இதனால் பீதியில் உறைந்த கிராமத்தினர் தங்கள் ஊருக்கு யாரோ, பில்லி சூனியம் வைத்து ஏவல் செய்து விட்டதாக நினைத்து மந்திரவாதிகளை அழைத்து வந்து, ஊர்கூடி பூஜை வைத்தனர். ஆனாலும், தீப்பற்றி எரிவது மட்டும் கட்டுப்படாததோடு, மேலும் அதிகரிக்கவே செய்தது.

கங்கை அம்மனுக்கு பொங்கல் வைத்து, ஆடு பலியிட்டு பூஜை நடத்தினால் இதுபோல் நடக்காது என்று பூசாரிகள் கூறியதைத் தொடர்ந்து அதனையும் செய்து பார்த்தனர் கிராம மக்கள்.

ஆனாலும், மர்மத் தீ தொடர்ந்து பற்றி எரிந்ததால் பதறிய மக்கள், போலீஸின் உதவியை நாடினர். விசாரணையில் இறங்கிய போலீஸார் ஊரில் வெட்டியாக திரியும் சிலரை பிடித்து விசாரித்த போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனவே, முதலில் தீ பிடித்து எரிந்த வீட்டிலிருந்த 19 வயது பெண் கீர்த்தனாவிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் தன் தாயை கண்டித்த கீர்த்தனா, நடத்தையை மாற்றிக் கொள்ளுமாறும் வேறு ஊருக்கு சென்று விடலாமெனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், வேறு ஊருக்கு வர மாட்டேன் என தாய் அடம் பிடித்ததால், முதலில் தனது வீட்டு பீரோவில் தீ வைத்து விட்டு, எப்படி நடந்தது என்றே தெரியாது என ஊர்க்காரர்களை நம்ப வைத்துள்ளார். இதில், பீரோவிலிருந்த பொருட்கள் மற்றும் 2500 ரூபாய் பணம் எரிந்த நிலையிலும் ஊரை விட்டு வர மறுத்துள்ளார் தாய். எனவே, தூங்கிக் கொண்டிருந்த தாயின் புடவையில் தீ வைத்து விட்டு அவரை காப்பாற்றியதோடு, பில்லி சூனியம் ஏவல் என பயமுறுத்தி பார்த்துள்ளார் மகள். அதற்கும் தாய் மசியாததால், தனது தாயுடன் தொடர்பில் இருப்பவர்களின் வீடுகளுக்கு இரவு நேரத்தில் நைசாகச் சென்று தீயை வைத்து விட்டு வந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஊரில் திடீர் திடீரென ஏன் தீப்பிடித்தது என்பதை இப்போது தெரிந்துக் கொண்ட மக்களுக்கு, தாயை திருத்த மகள் நடத்திய விபரீத போராட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments