மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்... அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி...!

கல்வியாளர், தொழில் அதிபர், ஆன்மீகவாதி என பல முகம் கொண்ட மதுரை கருமுத்து கண்ணன் உடல்நலக் குறைவால் தமது 70வது வயதில் காலமானார்.
புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்காராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்ததோடு, பல கல்வி நிறுவனங்களின் நிர்வாகியாகவும், தியாகராஜர் நூற்பாலைகளின் தலைவராகவும் இருந்த கருமுத்து கண்ணன், மத்திய அரசின் ஜவுளி குழுத்தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
உடல்நலக்குறைவால் கடந்த சில வாரங்களாக ஓய்வெடுத்து வந்த அவர் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, மதுரை கோச்சடையில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மூர்த்தி, பெரியகருப்பன் ஆகியோருடன் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
சிறந்த கல்வியாளர் மற்றும் கொடையாளரான கருமுத்து கண்ணனின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பு என ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ,முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ, கனிமொழி எம்.பி, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிசடங்குகள் புதன்கிழமை நடைபெறுமென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments