காவு வாங்கிய கள்ளச்சாராயம்... 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட்

0 1546
காவு வாங்கிய கள்ளச்சாராயம்... 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் ஆதரவோடு கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், காவல் ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டிவனம் மற்றும் மரக்காணம் சுற்றுவட்டாரத்தில் கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது என பரவலாகவே குற்றச்சாட்டு உள்ளது. அதனை நிரூபிக்கும் விதமாக மீனவர் குப்பமான எக்கியார் குப்பம் பகுதியைச் சேர்ந்த 16க்கும் மேற்பட்டோர் நேற்று அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்தியுள்ளனர்.

அவர்களில் ஆறு பேர் வீட்டிற்கு சென்றவுடன் மயக்கடைந்து விழுந்துள்ளனர். உடனடியாக உறவினர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 பேரையும் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் சுரேஷ், சங்கர், தரணிவேல் என அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்கானிப்பாளார் ஸ்ரீநாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் எக்கியார் குப்பம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்ட போது மது அருந்தி மயக்க நிலையில் இருந்த தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகை வாசன், ரமேஷ், ராஜமூர்த்தி ஆகிய ஐந்து பேரை மீட்டு காவல்துறை வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர்களில் ராஜமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் நேற்று முன்தினம் சாராயம் குடித்து உடல்நிலை சரியில்லாமல் இருந்த வீராந்தம் விஜயன், வேல்முருகன், ராமு மண்ணாங்கட்டி ஆகியோர் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து காவலர்கள் மற்றும் பொது மக்கள் கடற்கரையோரங்களில் மது அருந்திவிட்டு யாரேனும் உள்ளனரா என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக எக்கியார் குப்பத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த அமரன் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

அடுத்தடுத்த உயிரிழப்புகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர். கைது செய்யப்பட்ட அமரன் மட்டுமின்றி அப்பகுதியில் ஏராளமானோர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர்களையும் கைது செய்ய வேண்டுமென்றும் அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.

டாஸ்மாக் மதுவை விட விலை குறைவு என்பதால், கூலி வேலைக்குச் செல்லும் பலர் கள்ளத்தனமாக விற்கப்படும் சாராயத்தை வாங்கி அருந்துகின்றனர் என்றும் போலீசாரும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை என்றும் மரக்காணம் சுற்றுவட்டார கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டதாக மரக்காணம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன் மற்றும் மதுவிலக்கு கலால் காவல்துறை பெண் காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும், 2 காவல் உதவி ஆய்வாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை குடித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் இது குறித்து பேட்டியளித்த அவர், டாஸ்மாக்கில் வாங்கப்பட்ட மதுவினை உட்கொண்டதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனக்கூறினார்.

மேலும், 10 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து, மாவட்டம் முழுவதும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் ஐ.ஜி. குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments