வருமான வரித்துறை வாத்திக்கே ரெய்டாம்.... திருடனால் வந்த சோதனை... ஆள் இருக்கும் போதே அபேஸ்..!

0 4105

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் சோதனைக்காக சென்ற வருமானவரித்துறை அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், வீட்டில் ஆள் இருந்த போதே நகை, பணத்தை லாவகமாக திருடிச்சென்ற சம்பவம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அரங்கேறி உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கடந்த 25ஆம் தேதி ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொள்வதற்காக ராமசுப்பிரமணியன் முந்தைய நாள் இரவே பணிக்கு சென்றுவிட்டார்.

அன்றிரவு ராமசுப்பிரமணியத்தின் மனைவி ஆஷா மற்றும் அவரது மகன் மட்டும் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்த போது, பக்கத்து அறையில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

உடனே அந்த அறைக்கு சென்று பார்த்த போது ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் தப்பிச்சென்றது தெரியவந்தது. பீரோவை சோதனையிட்ட போது அதில் இருந்த 18சவரன் நகைகள் மற்றும் 1லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது .

இது குறித்து அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்த நிலையில் வருவானவரித்துறை அதிகாரி ராமசுப்பிரமணியன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் கைரேகை பதிவுகளை வைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.

இதில் கொள்ளையன் பேருந்து மூலமாக தப்பிசென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சியில் பதிவான முக அடையாளங்களை வைத்து, கொள்ளையடித்த நபர் பழைய குற்றவாளியான ஆனந்த் என்பதை கண்டுபிடித்த போலீசார் , வில்லிவாக்கத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் ஆனந்தை கைது செய்தனர்.

அவனிடம் இருந்து 34 கிராம் நகைகள் மற்றும் 18,000 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த போலீசார், மீதம் உள்ள நகை பணத்தை எங்கு வைத்துள்ளான் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணா நகர் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை சென்ற வருமானவரித்துறை அதிகாரி வீட்டில் கொள்ளையன் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments