மாணவிகளுக்கு தொல்லை கலக சேத்திரமானது கலாஷேத்ரா கல்லூரி..! 4 ஆசிரியர்கள் மீது புகார்

0 1573

சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் கவின் கலை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை மூடி மறைக்க முயல்வதாக குற்றம்சாட்டி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கலாச்சேத்திரா அறக்கட்டளையின் கீழ் சென்னை திருவான்மியூரில் ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி வளாகம் தான் மாணவிகளின் போராட்டத்தால் கலக சேத்திரமாக மாறி உள்ளது

பழமையான இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பரத நாட்டியம், பரத நாட்டிய பயிற்சியாளரான நட்டுவாங்கம், உள்ளிட்ட பல்வேறு கலைகளை கற்று வருகின்றனர்.

இங்கு பயின்று வரும் சீனியர் மாணவிகளுக்கு 4 ஆசிரியர்களால் தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கும் மாணவிகள் நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இங்குள்ள தியேட்டரில் வைத்து நேரடியாகவும், செல்போன்களில் ஆபாசமான வகையில் அழைப்பு விடுத்தும் எல்லை மீறும் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தால் அதை விசாரிக்க வேண்டிய குழுவில் உள்ள பெண் அதிகாரிகளே புகாரை மூடி மறைப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் தனி ஆளாக வந்து அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரிப்பது போல கண்துடைப்பிற்கு சில கேள்விகளை கேட்டுவிட்டு சென்றதாக மாணவிகள் வேதனை தெரிவித்தனர்

இதனிடையே, நேற்றிரவு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை சந்திக்க வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இரண்டு மாத காலமாக இருந்து வரும் குற்றச்சாட்டில் ஏன் விசாரிக்கவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டார்.

கல்லூரி வளாகத்தை விட்டு அவரை வெளியேறவிடாமல் மாணவிகள் சூழ்ந்துகொண்டதால், அவர் மயக்கம் அடைந்தது சரிந்து விழந்தார்.

மாணவிகளின் போராட்டத்தை ஒடுக்க கல்லூரிக்கு வருகிற 6 ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் பாலியல் துன்புறுத்தல் அளித்து வருவதாகவும், அவர்களை கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் , நடனத்துறை தலைவர் ஜோஸ்னா மேனன் ஆகியோர் காப்பாற்றி வருவதாக குற்றஞ்சாட்டி உள்ள மாணவிகள். இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகத்துக்கு மின் அஞ்சல் மூலம் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், கலாக்ஷேத்ரா விவகாரத்தில் காவல் துறைக்கு எழுத்துப்பூர்வ புகார் வரும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் கூடுதல் ஆணையர் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விசிக. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், விரிவான விசாரணை மேற்கொண்டு மாணவிகளிடம் அத்து மீறலில் ஈடுபட்டோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments