பல்லை பிடுங்கிய ஏ.எஸ்.பி.பல்வீர் சிங்.. காவல் நிலைய கொடுமை..! காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!

0 3082

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்கு சென்ற 23 பேரின் பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களுக்கு, புகார் தொடர்பான விசாரணைக்கு சென்றதால், ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கிடம் பற்களை பறிகொடுத்தவர்கள் தான் இவர்கள்..!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக ஏ.எஸ்.பியாக கடந்த 4 மாதங்களாக பொறுப்பில் இருந்தவர் பல்வீர் சிங். 2020 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியான பல்வீர் சிங் தனது கட்டுப்பாட்டில் இருந்த அம்பாசமுத்திரம், மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களுக்கு, புகார்கள் தொடர்பான விசாரணைக்கு வரும் நபர்களின் வாயில் ஜல்லிக்கற்களை அடைத்து அடித்து கொடுமைப்படுத்துவது, பற்களை பிடுங்குவது, காதில் துளையிடுவது போன்ற கடுமையான கொடுமைகளை செய்து வருவதாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலமுக்கு உத்தரவிடப்பட்டது. காவல் அதிகாரிகள், காவலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பிடமும் உரிய விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த கூட்டு அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வழக்கறிஞர் மகராஜன், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி, விசாரணை என அழைத்துச்சென்று, காவல் நிலையத்தில் வைத்து 23 பேர் வரை பல்லை பிடுங்கி உள்ளார். பல்லை பிடுங்கிய நபர்கள் அனைவருமே அப்பாவி பொதுமக்கள், கணவன் மனைவி சண்டை, சிசிடிவி கேமரா உடைத்தவர்கள் என சிறிய சிறிய புகாரில் உள்ளவர்கள் மட்டுமே என்றார்.

பொதுமக்களை கொடூரமாக தாக்கிய ஏஎஸ்பி பல்வீர் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும், காவல்துறையினர் மிரட்டுவதால் நீதி விசாரணை அதிகாரிகளிடம் சாட்சி சொல்ல அனைவருமே பயப்படுகிறார்கள். எனவே ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வழக்கறிஞர் மகராஜன், சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படும் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக் காட்சிகளை உடனடியாக கைப்பற்ற வேண்டும் என்றார்.

சாத்தான்குளம் சம்பவம் போல ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மற்றும் போலீசார் செய்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் தகவல்கள் நெஞ்சை பதற வைப்பதாக இருப்பது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments