19 மாடி கட்டிடமாம்.. மின் இணைப்பு இல்லையாம்.. ரூ 8 கோடி கேக்குறாங்களாம்..! என்னடா பித்தலாட்டமா இருக்கு.?

0 42306

சென்னையில் 700 குடும்பங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மின்இணைப்பு வழங்குவதற்கு 8 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டு மின்இணைப்பே வழங்காமல் 5 ஆண்டுகளாக அதிகாரிகள் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 3 தினங்களாக குப்பை எடுப்பதையும் ஊழியர்கள் நிறுத்தி விட்டதால், குப்பைக்குள் தவிப்பதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

நீச்சல் குளம் இருக்கு... கிளப் ஹவுஸ் இருக்கு... செக்யூரிட்டி இருக்கு... 24 மணி நேரம் அனைத்து வகையான வசதிகளும் இருக்குன்னு சொன்னீங்களே மின்சாரம் இருக்காதுன்னு சொன்னீங்களா ? என்று ஆதங்கப்பட்டு வீதிக்கு வந்துள்ள இந்த எலைட் மக்கள் குடியிருக்கும் 19 அடுக்குமாடி குடியிருப்பு இதுதான்..!

சென்னை பெரும்பாக்கத்தில் ஓசோன் கம்யூன் என்ற நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள 7 பிளாக்குகளில் 700 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இன்னும் இரண்டு பிளாக்குகளில் கட்டுமான பணி நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 5 வருடங்களாக தமிழக மின்வாரியத்தின் மூலம் மின் இணைப்பு வழங்காமல் ஜென்செட் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும், மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மெயின்டெனன்ஸ் பணம் வழங்கியும் எந்த வசதியும் இல்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

85 லட்சம் ரூபாய் கட்டி தாங்கள் வாங்கிய குடியிருப்புக்கு வாழத் தகுதியான இடம் என்ற சான்றிதழ் கூட தற்போது வரை வழங்கவில்லை என்றும், அவ்வப்போது ஜெனரேட்டர் மூலம் வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தப்படுவதால் லிப்டில் சிக்கித் தவிப்பதாகவும், காவலாளி இல்லாததால் செல்போன் மூலம் உதவிகேட்டு மீண்டதாகவும் குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்தனர்

 

இந்த கட்டுமான நிறுவனத்திடம் மின்வாரிய அதிகாரிகள் 8 கோடி ரூபாய் வரை கையூட்டுக் கேட்பதாகவும், அதனை குறைக்கக் கேட்டு கட்டுமான நிறுவனம் சார்பில் பேரம் பேசப்பட்டு வருவதாகவும், குடியிருப்புவாசி ஒருவர் குண்டை தூக்கிப்போட்டார்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது , சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மின் இணைப்பு வேண்டும் என்று இதுவரை தங்களை அணுகவில்லை என்று தெரிவித்தனர்.500 கோடி ரூபாய்க்கு மேல் குடியிருப்புகளை விற்று கல்லாக் கட்டிய கட்டுமான நிறுவனம் தங்களை வஞ்சிப்பதாகவும், அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments