30 ஆண்டு குப்பைமேடு... பூங்காவாகப் போகிறதாம் சென்னை மாநகராட்சி ஜரூர்..!

0 12055

சென்னை பெருங்குடியில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து 30 ஆண்டுகளாகியும் மக்காமல் மண்ணுக்கு விஷமாய் கிடக்கின்ற பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளை தோண்டி எடுத்து, மறுசுழற்சிக்கு அனுப்பி வைத்து அந்த இடத்தை பூங்காவாக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சி  விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது

கடைகளுக்கு பொருள் வாங்க செல்லும்போது கையோடு ஒரு மஞ்சள் பையை எடுத்துச்செல்ல மறந்த மக்களால் சென்னை பெருங்குடியில் கடந்த 30 ஆண்டுகளாக குவித்து வைத்தும் மக்காமல் மண்ணுக்கு கேடாக மலைபோல் குவிந்திருக்கும் குப்பை மலைக் குன்றுகள் தான் இவை..!

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5500 டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில் சரிபாதிக்கும் அதிகமான குப்பைகள் பெருங்குடி சதுப்புநில பகுதியில் அமைந்துள்ள 250 ஏக்கர் பரப்பளவிலான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் பெருங்குடி குப்பை கிடங்கில் தரைமட்டத்திற்கு மேல் 30.63 லட்சம் கன மீட்டர் அளவில் குப்பை கழிவுகள் மலை போல குவிந்திருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த குப்பை கழிவிகளை உயிரியில் அகழ்ந்தெடுத்தல்(Bio Mining) முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்க 350 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியது.

30 ஆண்டுகளுக்கு மேலாக மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணை நஞ்சாக்கும் ராட்சத மலை போல் இருக்கின்றன. இதனை பன்னாட்டு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 6 பகுதிகளாக குப்பை கிடங்கு பிரிக்கப்பட்டு பயோ மைனிங் நடைபெற்று வருகிறது.

முதலில் குப்பை மேடுகளுக்கு இடையே இடைவெளி ஏற்படுத்தி நன்கு உலர்த்தப்படுகிறது. மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது. பின்னர் பன்னாட்டு நவீன தொழிநுட்பம் கொண்ட எந்திரங்கள் மூலம் மண், சிறு கற்கள், பெரிய கற்கள், திடமான மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக், மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் என தனித்தனியாக வகைப்படுத்தி பிரித்தெடுக்கப்படுகிறது.

பிரிக்கப்படும் குப்பைகளில் இருந்து கிடைக்கும் மண் வனதுறைக்கு அனுப்பப்படுகிறது. கற்கள் போன்றவை தாழ்வான பகுதிகளில் கொட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் உள்ளிட்ட மற்ற பொருட்கள் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

ஒப்பந்தம் வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கன மீட்டர் அளவிலான குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு 60% நிலம் மீட்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் மீட்கப்படும் இடங்களில் 50 ஏக்கருக்கு மேலாக சூழலியல் பூங்கா, மியவாகி காடுகள், அதிக திறன் கொண்ட பயோ CNG உற்பத்தி நிலையம் உள்ளிட்டவை அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

பெருங்குடி குப்பை கிடங்கு முழுமையாக பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுப்பதால் தோராயமாக 15 லட்சம் டன் கார்பன் வெளியேற்றம் தடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 1990 களுக்கு பிறகு உருவாக்கப்பட்டுள்ள குப்பை கிடங்குகளில் அதிகளவில் கைப்பை பிளாஸ்டிக் இருப்பதாகவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து குப்பைகளை தரம் பிரித்து மக்கள் வழங்கும் போதே வருங்காலங்களில் இது போன்ற குப்பை கிடங்குகள் உருவாவது தடுக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments