தலப் பொங்கல் தெரியும்.. அதெப்படி தலையிலேயே பொங்கல் வச்சாங்க..? இது தான் அந்த டெக்னிக்

0 1621

கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பக்தர் ஒருவரது தலையில் கற்பூர தீபம் ஏற்றி பொங்கல் வைத்த நிகழ்வு அரங்கேறி உள்ளது. பக்தர்களை கவர தலையில் சும்மாடு கட்டி, பொங்கல் வைத்த டெக்னிக் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு.

கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாசித் திருவிழா உற்சாகமாக நடந்தது

விழாவில் பக்தர் ஒருவரது தலையில் பொங்கல் வைத்து படையலிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதாக வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டது.

அது எப்படி தலையில் தீவைத்து பொங்கல் வைத்தார்கள்..? என்ற கேள்வி பலருக்கு எழுந்தாலும் , எல்லாம் அம்மன் அருள்..! என்று சிலர் சமாதானம் அடைந்தாலும், தலையில் பொங்கல் வைத்த நிகழ்வு சிலருக்கு விடைதெரியா கேள்வியாகவே இருந்தது.

கோவில் விழாவில் தலையில் பொங்கல் வைத்த டெக்னிக் குறித்து விழாகுழுவினர் தெரிவித்த தகவல்கள் வியப்புக்குரியதாக இருந்தது. சம்பந்தப்பட்ட பக்தர் தலைக்கு சூடு பரவாமல் இருக்க முதலில் சுமை தூக்குவோர் தலையில் கட்டி இருப்பது போன்று அரிசி மாவுடன் கூடிய சும்மாடு ஒன்றை கட்டி உள்ளனர்

துணியால் சுற்றப்பட்ட சின்ன மண் சட்டி போன்ற அடுப்பை, அந்த சும்மாடு மீது வைத்து அதில் கற்பூரத்துண்டுகளையும், சில குச்சிகளையும் போட்டு மண்ணெண்னையை ஊற்றி தீவைத்து சில்வர் பானையை அதன் மீது ஏற்றியதோடு, அந்த பக்தரின் தலை அசையாமல் பார்த்துக் கொண்டனர்.

பானையில் உள்ள நீர் விரைவாக சூடாக வேண்டும் என்பதற்காக வழக்கத்தைவிட கொஞ்சமாக நீர் வைத்து அதற்கு தகுந்தாற் போல அரிசி மற்றும் சர்க்கரையை சேர்த்து கிளறியுள்ளனர்.

அந்த சட்டியில் இருந்து தீ சும்மாடுக்கு பரவி விடாமல் இருக்க ஒருவர் சும்மாடு துணியை சுற்றி சுற்றி தண்ணீரை பீய்ச்சியபடி இருந்துள்ளார்.

மற்றொருவர் தீ அணைந்து விடாமல் இருக்க அந்த சிறிய அடுப்புக்குள் மண்ணெண்னையை ஸ்பிரே செய்து கொண்டிருந்தார்.

விபரீத முயற்சி என்றாலும் சில நிமிடங்களுக்கெல்லாம், சில்வர் பானையில் ஜிலீர் பொங்கல் தயாரானதாக கூறி அம்மனுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நடந்த மாயானக்கொள்ளை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பரவசமாக சாமி ஆடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments