மாமியாரை தலைமுடியை பிடித்து இழுத்து சென்று மருமகள் செய்த சம்பவம்..! கம்பால் தாக்கிய மாமனாருக்கு பதிலடி
சென்னை, எண்ணூர் அருகே மாமியார் மருமகளிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது வீட்டில் இருந்து தாய், தந்தை மற்றும் தங்கைகளை வரவழைத்த பெண், தனது மாமியாரை தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்று தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. மருமகளை கம்பால் அடித்த மாமனார் குடும்பத்துக்கு பெண் வீட்டார் கொடுத்த பதிலடி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
சென்னை எண்ணூர் காசிகோவில் குப்பத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலாவதி இவர்களது மகன் கார்த்திக்கிற்கும், எண்ணூர் காசி கோவில் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவினா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014 ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சில வருடங்கள் பிரிந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். பிரவீனாவுக்கும் அவரது மாமியார் கலாவதிக்கும் திருமணபத்திரிக்கையில் பெயர் போடுவது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று வெளியில் சென்று வந்த மருமகள் பிரவீனாவை மாமியார் கலாவதி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பிரவீனா மாமியாரை கம்பால் தாக்க மாமனார் தடுத்தார்.
தனது மனைவி தாக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த தமிழ் செல்வன் ,கம்பை பறித்து மருமகளை தாக்கியதால், பிரவீனா தனது பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த அவரது தாய் தந்தை மற்றும் தங்கைகள் ரகளையில் ஈடுபட, பிரவீனா, சோபாவில் அமர்ந்திருந்த தனது மாமியார் கலாவதியின் தலைமுடியை பிடித்து தர தரவென இழுத்துச்சென்று தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
மாமனாருக்கும் சில அடிகள் விழுந்தது, தாக்குதலுக்கு பயந்து தரையில் படுத்துக்கிடந்த மாமியார் கலாவதி மெல்ல எழுந்து சோபாவில் அமர்ந்தார், மீண்டும் வந்த பிரவீனா தனது மாமியார் தலைமுடியை பிடித்து ஆட்டி விட்டுச்சென்றார்
தாங்கள் தாக்கப்பட்டது குறித்து தமிழ்செல்வன், கலாவதி தம்பதி எண்ணூர் போலீசில் புகார் அளித்தனர், மாமியார், மாமனார் தாக்கியதாக மருமகள் பிரவீனா புகார் அளித்தார். இருதரப்பு புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் ஜாமீனில் வெளிவர இயலாத சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள கலாவதி, தங்கள் மீது தாக்குதல் நடத்திய மருமகள் குடும்பத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
விட்டுக்கொடுக்க மனமில்லா மாமியார் , மருமகள் என்ற இரு பெண்களின் ஆத்திரமான பேச்சால் உருவான வாக்குவாதம்... அடிதடியில் முடிந்து... மொத்த குடும்பத்தின் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்யும் நிலைக்கு இழுத்துச்சென்றிருப்பது குறிப்பிடதக்கது.
Comments