கர்நாடகாவில் ரூ.16,000 கோடியில் மக்கள் நலத்திட்டங்கள்.. பிரதமர் மோடி அடிக்கல்..!

0 968

கர்நாடகாவில், 16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பெங்களூரு - மைசூரு அதிவிரைவு சாலை, தார்வாத் ஐஐடி வளாகத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கச்சென்ற பிரதமர் மோடிக்கு, சாலையின் இருபுறமும் நின்று, பொதுமக்களும், பாஜகவினரும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்கள் வரவேற்பை ஏற்கும் விதமாக, பிரதமர் மோடி, கார் படியில் நின்று, கைகளை அசைத்தவாறு நீண்ட தூரம் சென்றார். இடையிடையே தனது கார் மீது இருந்து மலர்களை எடுத்து பொதுமக்கள் மீது பிரதமர் தூவினார்.

 8,408 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு-மைசூரு இடையேயான 118 கிலோமீட்டர் தூர விரைவுச்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விரைவுச்சாலையால் பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு செல்லும் நேரம் மூன்றரை மணி நேரத்தில் இருந்து, ஒன்றரை மணி நேரமாக குறையும்.

அதனைத்தொடர்ந்து மைசூரு-குஷால்நகர் இடையே 4,130 கோடி ரூபாய் மதிப்பில் 92 கிலோ மீட்டர் தூர 4 வழிச்சாலை திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதனை முடித்துக்கொண்டு தார்வாத் சென்ற பிரதமர், 850 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தார்வாட் ஐஐடியை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் சித்தாரூடா சுவாமி ஹுப்ளி ரயில் நிலையத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பில் 1,507 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள, உலகின் மிக நீளமான ரயில் நடை மேடையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த நடைமேடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹுப்ளியில் 520 கோடி ரூபாய் மதிப்பிலான சீர்மிகு நகர திட்டப்பணிகளை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, 250 கோடி ரூபாய் மதிப்பில் ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்திற்கும் அடிக்கல் நாட்டினார். மேலும், 1040 கோடி ரூபாய் மதிப்பிலான தார்வாத் குடிநீர் திட்டம், 150 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ள சேதக் கட்டுப்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். கடந்த 2 மாதத்தில் மட்டும் கர்நாடகாவிற்கு 6-வது முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments