காரை விட்டு மோதி ரவுடியை வெட்டிச்சாய்த்த கும்பல்...!

0 4147

திருவாரூர் அருகே வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த 8 பேர் கும்பலை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் பூவனூரை சேர்ந்த "வளரும் தமிழகம் கட்சி"-யின் மாநில இளைஞரணி செயலாளரான ராஜ்குமார் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் என்பவர் கொலையில் குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இந்நிலையில் வழக்கு ஒன்றில் ஆஜராக மாருதி ஸ்விப்ட் காரில் தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் சென்றபோது, கமலாபுரத்திற்கு அருகே அதிவேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார் இவர்கள் வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதில் பின்பக்கம் அமர்ந்திருப்பவர்கள் டோர் லாக் ஆனதால் வெளியே வர முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஸ்கார்பியோ காரில் இருந்து இறங்கிய எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பூவனூர் ராஜ்குமாரை நோக்கி வந்துள்ளனர்.

காரில் முன்பக்கம் அமர்ந்திருந்த ராஜ்குமார், கீழே இறங்கி, தப்பிப்பதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைவதற்காக ஓடும்போது துரத்திச் சென்று, கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக அவரை வெட்டி உள்ளனர். 8 பேர் கும்பல் நிகழ்த்திய வெறிச்செயலில், பூவனூர் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மேலும், உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. மேலும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், ரவுடி ராஜ்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஸ்டாலின் பாரதி, வீரபாண்டியன், சூர்யா, அரசு மற்றும் மாதவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்தாண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் தலைத் துண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜ்குமார் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக கூறப்படும் நிலையில், அந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக நடேச தமிழார்வனின் மகன் ஸ்டாலின் பாரதி தலைமையிலான கும்பல், ராஜ்குமாரை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரவுடி ராஜ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments