போலீஸ் எனக் கூறி கனடா முதியவரை ஏமாற்றி ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பணம் பறித்த 2 ஏஜென்டுகள் கைது..!

ஆன்மீக சுற்றுலாவாக சென்னைக்கு வந்திருந்த கனடா நாட்டு முதியவரிடம் போலீஸ் எனக்கூறி பணம் பறித்த வழக்கில், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்டுகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கனடாவில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்ரீதர்தாஸ், சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.
கனடா பணத்தை மாற்றுவதற்காக தியாகராய நகருக்குச் சென்ற ஸ்ரீதர்தாஸை சந்தித்து தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட நபர் ஒருவர், அவருடனேயே அறைக்குச் சென்றுள்ளார்.
பின்னர், தன்னை போலீஸ் எனக் கூறிய அந்த நபர், ஸ்ரீதர்தாஸ் கஞ்சா விற்பனை செய்வதாகக் கூறி மிரட்டி அவரிடமிருந்து மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை பறித்துக் கொண்டு மற்றொரு நபரை வரவழைத்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து, விசாரணை நடத்தி வந்த போலீசார், சென்னையில் தங்கியிருந்த கோயம்புத்தூரை சேர்ந்த அஜிஷெரிப், புதுக்கோட்டையை சேர்ந்த கலியமூர்த்தி ஆகியோரை கைது செய்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
Comments