தேசிய நெடுஞ்சாலைத்துறை மெத்தனம்.. உயிர்பலி வாங்கும் வேகத்தடைகள்..! தாயின் சடலத்துடன் மகன் கண்ணீர்
பெரியகுளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை நிற பட்டை கோடுகள் இல்லாமல் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையால், இரு சக்கரவாகனத்தில் மகனுடன் சென்ற பெண் தூக்கி வீசப்பட்டு பலியான விபரீதம் அரங்கேறி உள்ளது. தாயின் சடலத்தை மடியில் கிடத்தி கண்ணீர் விட்டு கதறியவாறு ஆம்புலன்சுக்காக காத்திருந்த இளைஞரின் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
தேனி மாவட்டம் போடி அருகே குப்பி நாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பையா - அம்சவள்ளி தம்பதிகளின் மகன் தீபக்குமார் . சம்பவத்தன்று பெரியகுளத்தில் நடக்க இருந்த உறவினரின் கருமாதி விசேசத்தில் கலந்து கொள்வதற்காக தீபக்குமார் தனது தாயார் அம்சவள்ளியுடன் பல்சர் பைக்கில் புறப்பட்டுச்சென்றார்.
தலைக்கவசம் அணிந்தபடி தீபக்குமார் வாகனம் ஓட்டிய நிலையில், தாய் அம்சவள்ளி தலைகவசமின்றி பின்னால் அமர்ந்திருந்தார். போடியிலிருந்து பெரியகுளம் நோக்கி சென்ற போது கைலாசபட்டி பகுதியில் சாலையின் குறுக்கே புதிதாக அண்மையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையின் மீது ஏறியதில் பல்சர் வாகனம் தூக்கி வீசப்பட்டது.
தலைக்கவசம் அணிந்திருந்ததால் தீபக்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், பின்னால் அமர்ந்திருந்த தாய் அம்சவல்லி தூக்கி எறியப்பட்டு, சாலையில் விழுந்த வேகத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
சாலையில் சடலமாக கிடந்த தாயின் உடலை சாலையோரம் தூக்கிச்சென்ற தீபக்குமார், தனது மடியில் கிடத்தி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்து குறித்து அவரிடம் விசாரித்தனர்
விபத்து நடந்த திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 29 வேகத்தடைகள் உள்ளன. அண்மையில் விஐபி ஒருவர் வருகைக்காக அகற்றப்பட்ட அந்த வேகத்தடைகள் அனைத்தும் மீண்டும் போடப்பட்டபோது, கைலாசப்பட்டி வேகத்தடையையும் புதிதாக அமைத்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அதன் மீது பெயிண்ட்டால் வெள்ளை கோடுகள் போட மறந்து, மெத்தனமாக இருந்து விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை வர்ணம் பூசப்படுவதுடன், அனைத்திற்கும் முன்பாக பெரிய வேகத்தடை வரப்போகின்றது என்பதை அதிர்வுகளுடன் அறிவுறுத்தும் விதமான ரம்பிலிங் ஸ்டிரிப்ஸ் என்று சொல்லக்கூடிய மிகச்சிறிய அளவிலான வெள்ளை நிற வேகத்தடுப்புக்களை சாலையில் அமைப்பது அவசியம். அதே நேரத்தில் வேகத்தடைக்கு முன்பாக பிரதிபலிப்பானுடன் கூடிய எச்சரிக்கை பலகை வைத்து உயிர்பலிகள் தொடராமல் தடுக்க வேண்டும் என்பதே அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக உள்ளது..!
Comments