போலீசுக்கு குத்து விட்ட அட்டாக் வழக்கறிஞரை ஜாமீனில் விடுவித்தது நீதிமன்றம்..! சட்டம் சொல்வது என்ன ?
சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞரை 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வழக்கறிஞரை ஜார்ட்டவுன் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் பிரபாகர் தலைமையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஆஜானு பாகுவான வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேசன் என்பவரை மறித்தனர்.
பைக்கில் அவருடன் மனைவியும் இருந்தார். தலைக்கவசம் அணிந்திருந்த பிரசன்ன வெங்கடேசன் தான் ஒரு வழக்கறிஞர் என்று கூற வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அதனை கேட்காமல் அவரிடம் கெடுபிடி காட்டியதால் ஆத்திரம் அடைந்த பிரசன்ன வெங்கடேசன், தன்னை நெருங்கி வந்த காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரை கையால் ஓங்கி குத்தியதால் , எஸ்.ஐயின் முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து அவர் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்த போலீசார், பிரசன்ன வெங்கடேசனை பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் போலீசார் துணையுடன் போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இதையடுத்து அடித்து காயம் ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல்,கொலை மிரட்டல் விடுத்தல்,உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேசனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிரசன்ன வெங்கடேசன் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அவர் பிரபல வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக பணியாற்றி வருவதாலும், அவரது தந்தை வழக்கறிஞர் என்பதாலும் பிரசன்ன வெங்கடேசனை ஜாமீனில் விடுவிக்க கோரி ஏராளமான வழக்கறிஞர்கள் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் குவிந்தனர். விசாரணையின் இறுதியில் வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேசனை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் 7 எம் எம் மாஜிஸ்திரேட் ஜாமீனில் விடுவித்தார்.
Comments