அணைய தூர்வாருவதே மணலை அள்ளத்தான் அத போய் கூடாதுங்கற..? தம்பிகளை சுத்துப்போட்ட திமுகவினர்

0 1756

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையை தூர்வாருவது தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில், அணையில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்த நாம்தமிழர் கட்சியின் தம்பிகளை சூழ்ந்து கொண்டு திமுக வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் பரப்பலாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.

மில்லியன் கனஅடியை கொள்ளளவாக கொண்ட இந்த அணையின் உயரம் 120 அடி இந்த அணையை நம்பி சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த அணை முழுவதும் சேறும் சகதியும் அதிகளவில் இருப்பதால் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகக் கூறி இதனை தூர்வாருவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.

இதையடுத்து வடகாடு கிராமத்தில் உள்ள பரப்பலாறு அணையில் நீரை வெளியேற்றி மணல் மற்றும் வண்டல் மண் சுரங்கம் அமைத்து தூர்வாருவது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

சம்பந்தப்பட்ட அணைக்கட்டுக்கு உட்பட்ட ஆயக்கட்டு விவசாயிகளுக்கும், விவசாய அமைப்பு சார்பில் உள்ள பொறுப்பாளர்களுக்கும் முறையாகத் தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், விவசாயிகள் யாரும் இந்த கூட்டத்திற்கு வராததால் அனைத்து இருக்கைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினர் அணையைத் தூர் வாருவதற்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவித்தனர்.

கடைசியாக பேசிய நாம் தமிழர் கட்சி தம்பி ஒருவர் எழுந்து அணையை தூர் வாருவது குறித்த தகவலை அனைத்து மக்களுக்கும் முறையாக தெரிவிக்கவில்லை எனவும், அணையைத் தூர் வாரினால் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவேண்டும் என்றும், அணையில் உள்ள மணலை அள்ளத்தொடங்கினால் 5 ஆண்டுகளுக்கு அள்ளலாம், ஆனால் அது அணையை பாதிக்கும் என்பதால் மணலை அள்ளக்கூடாது எனவும் தெரிவித்தார்

மணல் அள்ளக்கூடாது என்று எதிர்ப்புக்குரல் வந்த அடுத்த கணம் பொங்கி எழுந்த திமுகவினர் , தம்பிகளைச் சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைக்கைப் பறித்ததால் சுமார் அரை மணிநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அணையைத் தூர்வாருவதே மணலை அள்ளுவதற்காகத்தான்... அதை போய் தடுக்குற... மைக்க கொடுடா என்று சிலர் ஆவேசமாகினர்.

தங்கள் கருத்தை தெரிவிக்காமல் செல்லப் போவதில்லை எனக் கூறி நாம் தமிழர் தம்பிகள் அங்கிருந்து செல்லாமல் துணிச்சலுடன் நின்றதால் மற்றொரு தம்பியிடம் மைக் கொடுக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் விசாகன், பேசி சமாதானப்படுத்தி கருத்துகூற அனுமதித்தார்.

அவரது கருத்தையும் கேட்டுக் கொண்ட பின்னர் கூட்டம் கலைந்து சென்றது. கூட்டத்தில் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments