ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

0 3256

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துச்சென்றனர்.

முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் சக்கர நாற்களில் சென்று வாக்களித்தனர்.

 தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பதற்றமான வாக்குசாவடிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருன்றனர்.

 இதனிடையே, இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு மை அழிவதாகவும், இதனால் போலி வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அதிமுகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்தனர்.

வீரப்பன்சத்திரம் திருநகர் வாக்குச்சாவடியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிமுக மற்றும் திமுகவினர் பரஸ்பரம் அளித்த புகாரை தொடர்ந்து, போலீசார், துணை ராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

 பன்னீர் செல்வம் பூங்கா, ஸ்டேட் வங்கி சாலை வாக்குப்பதிவு மையங்களில் செல்பேசிகளை எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறி போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 ஈரோடு பிரப் ரோடு பகுதியில் உள்ள 178ஆவது வாக்குச்சாவடியில் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால் கை சின்னத்தில் லைட் எரிவதாக அதிமுக புகாரளித்த நிலையில், அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, புதிய இயந்திரத்துடன் மீண்டும் தொடங்கியது.

 கருங்கல்பாளையம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 ஈரோடு கச்சேரி வீதியில் ஆதார் கொண்டு வந்த வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என அதிமுக புகார் அளித்திருந்த நிலையில், ஆதார் உள்பட அனுமதிக்கப்பட்ட 12 ஆவணங்களை வாக்காளர்கள் கொண்டுவந்தால் வாக்களிக்க அனுமதிக்குமாறு சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

 இதனிடையே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

பின்னர் பேசிய அவர், மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இளங்கோவனுக்கே தான் வாக்குப்பதிவு செய்ததாக கூறி கலகலப்பூட்டினார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு, கட்சி துண்டு அணிந்து கருங்கல்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்ததால், அவர் உள்ளே செல்ல துணை ராணுவப்படையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அவர் துணை ராணுவப்படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதி வழங்கினர். இதனையடுத்து, கல்லு பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார். பின்னர் பேசிய அவர், ஈரோட்டில் அனைத்து கட்சிகளும் நாகரீக அரசியலை முன்னெடுப்போம் என்றார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், பெரியண்ண வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தேர்தல் ஏற்பாடுகள் மிகவும் திருப்திகரமாக இருப்பதாகவும், தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

 தேமுதிக வேட்பாளரான ஆனந்த், கட்சி துண்டு மற்றும் கட்சியின் கரை வேஷ்டி அணிந்து அக்ரஹாரம் மதரஸா பள்ளியில் வாக்களிக்கச் சென்றதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தேர்தல் அலுவலருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 சம்பத்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி தனது மனைவியுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள், உடனுக்குடன் மாற்றப்படுவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments