கர்னலுடன் முகநூல் காதல்.. கருணையில்லாமல் கொலை.. அனாதையான குழந்தை.. துப்புகொடுத்த மா லிங்க பைரவி

0 3392

முகநூலில் உருகி உருகி காதலித்த சென்னை பெண்ணை அசாமிற்கு வரவழைத்து கொலை செய்து பிளாஸ்டிக் கவரில் சுற்றி சாலையில் வீசிய ராணுவ கர்னல் கைது செய்யப்பட்டார். 2வது திருமணம் செய்யும் எண்ணத்துடன் சென்று உயிரையும் இழந்ததோடு, தனது 4 வயது குழந்தையையும் அப்பெண் தவிக்க விட்டு சென்றது  குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

அசாம் மாநிலம் சாங்ச்சாரி என்ற இடத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்ததை அம்மாநில போலீசார் பிப்ரவரி 15ம் தேதி கண்டெடுத்தனர். இறந்தவர் குறித்து எந்த விபரமும் கிடைக்காத நிலையில், அவரது கழுத்தில் கிடந்த ஒரு டாலர் மட்டுமே போலீசாருக்கு துருப்புச் சீட்டாக மாறியது.

அந்த டாலரில் பொறிக்கப்பட்டிருந்த உருவம் குறித்த விவரங்களை இணையத்தில் தேடிய போது அது கோவையில் உள்ள மா லிங்க பைரவி சுவாமியின் உருவம் என்பது தெரிய வந்ததால், கோவில் நிர்வாகம் மூலமாக விசாரணையை துவங்கினர் போலீசார்.

டாலர் வாங்கியவர்களின் செல்போன் எண்களை வாங்கி விசாரித்த போது சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த வந்தனாஸ்ரீயை மட்டுமே தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து, அவரது வயதான பெற்றோர்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது, கணவரை பிரிந்த வந்தனா, வாரணாசிக்கு செல்வதாக கூறி 4 வயது குழந்தையுடன் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே, வந்தனாஸ்ரீயின் செல்போன் தொடர்புகளை பரிசோதித்த போது அசாமின் தேஜ்பூரில் உள்ள ராணுவ தலைமையகத்தின் பிஆர்ஓ லெப்டினன்ட் கர்னல் அமரீந்தர் சிங் வாலியா மட்டும் 138 முறை பேசி இருப்பது தெரிய வந்தது.

சந்தேகத்தின் பேரில் ராணுவ உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று கர்னலிடம் விசாரணை நடத்திய போது, வந்தனாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

தான், தமிழகத்தில் பணியாற்றியதால் முகநூலில் அறிமுகமான வந்தனாவுடன் பழகி வந்ததாகவும், ஏற்கனவே பலமுறை தாங்கள் சந்தித்துள்ளதாகவும் கூறிய கர்னல், பிப்ரவரி 14ம் தேதி டெல்லியில் இருந்து கவுகாத்திக்கு வந்த வந்தனாவோடு சொகுசு விடுதியில் தங்கியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது, திருமணம் குறித்து எழுந்த பேச்சால் இருவருக்கும் சண்டை வந்ததாகவும், அதில் தன் கையில் அணிந்திருந்த காப்பால் கழுத்தில் ஓங்கி குத்தியதில் கழுத்து எலும்பு உடைபட்டு வந்தனா உயிரிழந்ததாகவும் கூறிய கர்னல், சடலத்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றி காரில் எடுத்துச் சென்று வீசியதாகவும் கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை கொடூரத்தின் உச்சகட்டமாக தாய் இறந்ததை தெரிவிக்காமல் குழந்தையை ஏமாற்றி கொல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள ரயில் நிலையத்தில் நிர்கதியாய் தவிக்க விட்டுச் சென்று விட்டார் கர்னல் அமரீந்தர்.

கர்னலை கைது செய்த அசாம் போலீஸார், வந்தனாஸ்ரீ கொலையானதை அவரின் பெற்றோருக்கு தெரிவித்தனர். அவர்களும் சென்னையிலிருந்து அசாமுக்கு சென்று அங்கேயே இறுதிசடங்கினை செய்து விட்டு நிர்கதியாக விடப்பட்ட பேத்தியை மீட்பதற்காக கொல்கத்தா சென்றுள்ளனர்.

முன்பின் அறிமுகம் இல்லாதவர் கர்னலாகவே இருந்தாலும் பெண்கள் எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்றே.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments