சிறுவர்களை விசாகப்பட்டினத்திற்கு சுற்றி பார்க்க அனுப்புவது போல அனுப்பி கஞ்சா கடத்தல்..!

போலீசாரிடமிருந்து தப்பிக்க இளம் சிறார்களிடம் பணம் கொடுத்து ஊரை சுற்றிப் பார்த்து வாருங்கள் எனக் கூறி புதிய வழியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக 4 பேரை சென்னை வடபழனி போலீசார் கைதுசெய்தனர்.
ரயிலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக கிடைந்த தகவலையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த பயணிகளில் சந்தேகத்திற்கிடமாக நின்ற பெரும்பாக்கத்தை சேர்ந்த 20 வயதான சந்தோஷ் மற்றும் அவருடன் வந்த 15 வயது சிறுவனை விசாரித்ததில், அவர்களிடம் 3 கிலோ கஞ்சா மற்றும் ஆசிஸ் ஆயில் எனக் கூறப்படும் கஞ்சா ஆயில் இருந்ததைக் கண்டு போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
பெரும்பாக்கத்தைச் சேர்ந்த திலீப் குமார் என்பவர் சிறுவர்களிடம் பணம் கொடுத்து விசாகப்பட்டினம் சென்று சுற்றி பார்த்துவிட்டு, வரும்போது தங்களிடம் கொடுக்கப்படும் பார்சலை வாங்கிக்கொண்டு வருமாறு கூறி அனுப்பிவைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து பெரும்பாக்கத்தை சேர்ந்த திலிப்குமார் மற்றும் நங்கநல்லூரை சேர்ந்த சத்தியமூர்த்தி ஆகியோரையும் போலீசார் கைதுசெய்தனர்.
Comments