சண்டையில் சறுக்கியதால் நடிகர் விஜய் விஸ்வாவுக்கு கையில் மாவுக்கட்டு..! ரிஸ்க் எடுத்து நடித்தபோது விபரீதம்

0 3603
சண்டையில் சறுக்கியதால் நடிகர் விஜய் விஸ்வாவுக்கு கையில் மாவுக்கட்டு..! ரிஸ்க் எடுத்து நடித்தபோது விபரீதம்

ஏற்காட்டில் நடந்த சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் விஸ்வா என்பவர் தவறிவிழும் வீடியோ வெளியாகி உள்ளது. பைக்கில் இருந்து பாய முயன்றவருக்கு வழுக்கியதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கேரள நாட்டிளம் பெண்களுடனே..., பட்டதாரி, மாய நதி, சாயம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருப்பவர் நடிகர் அபி சரவணன் என்கிற விஜய் விஸ்வா..!

தற்போது பரபரப்பு, கும்பாரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் பெயரிடப்படாத படம் ஒன்றின் படப்பிடிப்பு ஏற்காடு மலையில் உள்ள ரிசார்ட்டின் காட்டு பகுதிக்குள் நடந்து வந்தது.

நாயகன் விஜய் விஸ்வா ஓடும் பைக்கில் இருந்து குதிப்பது போன்ற காட்சியை, பைக்கை நிறுத்தி வைத்து படமாக்கினர்.

அப்போது அந்த பைக்கை பின் பக்கம் நின்று சண்டைக்கலைஞர்கள் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அவர் குதிப்பதற்கு வசதியாக கீழே பஞ்சு மெத்தையும் போடப்பட்டிருந்தது. விஜய் விஸ்வா குதித்தபோது பைக்கை பிடித்திருந்தவர்கள் விட்டதால் பைக் சாய்ந்தது. இதில் சறுக்கியதால் கீழே சாய்ந்த அவர், பஞ்சு மெத்தையை விட்டு தவறி தரையில் பொத்தென்று விழுந்தார்.

விழுந்த வேகத்தில் வலது கையில் பலத்த வலியுடன் கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டார் நடிகர் விஜய் விஸ்வா.

அங்கு முதல் உதவிக்கு ஆம்புலன்ஸ் ஏதும் படப்பிடிப்பு குழுவினர் ஏற்பாடு செய்யாததால் சுமார் ஒன்றரை மணி நேரம் கடுமையான வலியுடன் சேலம் அழைத்து வரப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் வலது கை மூட்டெலும்பு நகர்ந்து இருப்பது தெரியவந்தது. அவருக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உதவி சண்டைக் கலைஞர்களின் சிறு கவனக்குறைவான செயலால் கையில் கட்டுடன் ஒரு மாதம் வீட்டில் ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் நடிகர் விஜய் விஸ்வா.

திரை உலகில் ஆக் ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தால் என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments