ஓடியாங்க.. ஓடியாங்க... வீட்டுக்கு ஒரு வெள்ளி விளக்கு கொடுக்குறாங்க..! ஓட்டுக்கு ரூ 10 ஆயிரமாம்டோய்...

0 2434

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன் சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை விளக்கேற்ற வசதியாக வீட்டுக்கு ஒரு வெள்ளி விளக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

வாராது வந்த மாமணியாய்... வந்த இடைத்தேர்தலால்... ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் தினம் தினம் வித விதமான பரிசுகளால் திக்குமுக்காடி வருகின்றனர்.

புது வேட்டி... புது சேலை ... சில்வர் குடம்... சில்வர் தட்டு... வெள்ளி கொலுசு.... கைகடிகாரம்.... குக்கர்... இளைஞர்களின் வாக்குகளை கவர டோனி படம் போட்ட ஸ்மார்ட் வாட்ச்.. என அள்ளிக்கொடுத்த நிலையில் வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளில் விளக்கேற்ற வசதியாக வீட்டுக்கு ஒரு வெள்ளி விளக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

10 கிராம் வெள்ளி விளக்கை பத்திரமாக கிப்ட் பேக் செய்து வாக்காளர்களின் வீடுதேடிச்சென்று ரகசியமாக சிலர் கொடுத்துச்சென்ற நிலையில் பக்கத்து வீட்டு அக்காவுக்கும் ஒன்று கொடுங்க என்று அக்கறையாய் உரிமைக்குரல் எழுப்பினார் ஒரு அம்மணி

தங்கள் வீட்டில் 2 ஓட்டு இருப்பதாகவும் ஆனால் ஒரு விளக்கு மட்டும் தான் கொடுத்துச்சென்றுள்ளதாக வெள்ளந்தியாக வேதனை தெரிவித்தார் அந்த பெண்மணி

ஓட்டுக்கு கொடுக்கப்படும் நோட்டும், பரிசு பொருட்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், மொத்தமாக ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் என்று கணக்கிட்டு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே வீதிக்கு ஒரு தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறிவரும் அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் தங்களுக்கு பரிசு பொருட்கள் கொடுப்பது குறித்து முறையான புகார்கள் ஏதும் வரவில்லை என்று ஜென் மன நிலையில் காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments