சீமான் முன்னால் கடுமையாக தாக்கப்பட்ட நாம் தமிழர் தம்பிகள்..! திமுகவினர் மண்டை உடைப்பு
ஈரோட்டில் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு பேரணியாக வந்த சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன் சத்திரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கட்சியினருடன் பேரணியாக வந்தார்
வீரப்பன் சத்திரம், சிவா வீதி வழியாக நாம் தமிழர் கட்சியின் பேரணி சென்ற போது ஆளும் கட்சியை விமர்சித்தபடி சென்றதாக கூறப்படுகின்றது. அங்கிருந்த திமுக பணிமனையில் இருந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் சம்பவத்தை வாகனத்தில் நின்றிருந்த சீமான் , அவரது கட்சி வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் மிகுந்த அதிர்ச்சியோடு பார்த்தனர்
சீமானுக்கு அருகில் நின்றவர் கட்டை ஒன்றை வைத்து சீமானுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தார்
தம்பிகளின் பலத்த பாதுகாப்பில் சீமான் அந்த இடத்தை கடந்து சென்ற சிறிது நேரத்தில், திமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் ஒருவரை ஒருவர் கட்டைகளாலும், கற்களைக் கொண்டும் கடுமையாக தாக்கிக் கொண்டதால் அங்கு கலவர சூழல் ஏற்பட்டது
நாம் தமிழர் கட்சியினரின் வாகனங்களை அடித்து நொறுக்கிய திமுகவினர், சீமான் ஆதரவாளர்கள் வாகனத்தில் கற்களை ஏற்றி வந்து தாக்கியதில் 2 பேர் காயம் அடைந்ததாக கூறி போலீசாரிடம் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டனர்
தொடர்ந்து இரு தரப்பையும் போலீசார் விரட்டி விட்டதால் அந்த இடம் பதற்றத்துடன் காணப்பட்டது
அங்கு வந்த காவல் அதிகாரிகள் சீமானின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பதாக கூறி சீமானை அங்கிருந்து புறப்பட சொன்னார்கள். ஆனால் 10 நிமிடம் பேசிவிட்டு செல்கிறேன் என்று மேடையேறிய சீமான், தனது தம்பிகள் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவரை பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். தாங்கள் முன் ஏற்பாடோடு வரவில்லை என்று அப்படி வந்திருந்தால் இங்கு கலகம் நிற்காது என்று தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை எச்சரித்தார்.
இதையடுத்து சீமான், மருத்துவமனைக்கு சென்று தாக்குதலில் காயம் அடைந்த தனது கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தார். காவல்துறையினர் இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Comments